மதுரை : திராவிட ஒழிப்பு மாநாடு அறிவிப்பு எதிரொலியாக இந்து மக்கள் கட்சி தலைவர்  அர்ஜுன் சம்பத்துக்கு காவல்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

தமிழ்நாட்டில் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தியதும், அதில் பேசிய உதயநிதி இந்து மதம் குறித்து அவதூறாக விமர்சனம் செய்தது சர்ச்சையாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, திராவிட ஒழிப்பு மாநாடுகளை நடத்த இந்து அமைப்புகள் முயற்சித்து வருகின்றன. ஆனால், அதை ஒடுக்கும் நடவடிக்கையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே திராவிட ஒழிப்பு மாநாடு நடத்த காவல்துறையினரிடம் மள்ளர் மீட்பு களத்தின் நிறுவனரும், மீண்டெழும் பாண்டியன் வரலாறு புத்தகத்தின் ஆசிரியருமான செந்தில் மள்ளர் என்பவர் அனுமதி கோரிய நிலையில், அதற்கு காவல்துறை மறுத்த நிலையில், பின்னர்  சென்னை உயர்நீதிமன்றத்தில், ‘திராவிட ஒழிப்பு மாநாடு’ நடத்த அனுமதி கோரியிருந்தார். அதற்கு உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.

அப்போது, திராவிட கொள்கைக்கு எதிராக மாநாடு நடத்த கூடாது என காவல் துறை அனுமதி மறுக்க முடியாது என்றும், திராவிட கொள்கைக்கு ஆதரவாக மட்டும் கருத்து தெரிவிக்க வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் காட்டமாக கூறியது. அதன்படி,  பூந்தமல்லியில் உள்ள தனியார் மண்டபத்தின் உள்ளரங்கில் ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று,  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்த மாநாட்டின் நிர்வாகிகள், இதில் கலந்துகொள்ள இருந்த முக்கிய நபர்கள், அடுத்தடுத்து பழைய வழக்குகளில் கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இதனால், அந்த மாநாடு நடத்த முடியாமல் போனது.

இந்த நிலையில், இந்த மக்கள் கட்சி சார்பில், சென்னையில்  ‘திராவிட ஒழிப்பு மாநாடு’ நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி நவம்பர் 1ந்தேதி மாநாடு நடத்தப்பட இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது மதுரை காவல்துறை பழைய வழக்கு காரணமாக, அர்ஜுன் சம்பத்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது. , விக்கிரமங்கலம் அருகே குடும்பத்தகராறு காரணமாக பால் பண்ணை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், சட்டம்-ஒழுங்கு பிரச்னை போல X தளத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாக கூறி, மதுரை  செக்கானூரணி காவல் நிலையத்தில் ஆஜராக  நாளை மாவட்ட எஸ்.பி. சம்மன் அனுப்பியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு அனுமதி அளித்த காவல்துறை, திராவிட ஒழிப்பு மாநாடு நடைபெறுவதை தடுக்கும் வகையில், இதுபோன்ற தரம் தாழ்ந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.