சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தைப் போல் இந்தியா முழுமைக்கும் ஒரு திராவிட மாடல் ஆட்சி தேவை எனக் கூறி உள்ளார்.
நேற்று இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி இல்ல திருமண விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தில் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்த திருமண விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர்,
“இன்றைக்கு நாடு போய்க்கொண்டிருக்கும் நிலைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஒரு நல்லாட்சி உருவாக்கித் தருவதற்கு நீங்கள் எந்த அளவிற்குத் துணை நின்றீர்களோ, அந்த ஆட்சி ஒரு திராவிட மாடல் ஆட்சியாக இன்றைக்கு எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ, தேர்தல் நேரத்தில் வழங்கிய உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை எந்த அளவிற்குத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதோ, அதுபோல் இந்திய நாட்டிற்கு ஒரு ஆட்சி தேவை.
காரணம், இன்றைக்கு மத்தியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி, பொறுப்பேற்ற காலத்திலிருந்து இன்று வரையில் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற முன்வரவில்லை. அதற்கு நேர்மாறாக மக்கள் விரோத போக்கோடு மதத்தை, சனாதனத்தை இன்றைக்கு மக்களிடத்தில் திணித்து, ஒரு சர்வாதிகார ஆட்சியை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் கூட, பொது சிவில் சட்டம் கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். நாட்டில் ஏற்கனவே சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் என்ற சட்டங்கள் இருக்கிறது. அதை நீக்கிவிட்டு பொது சிவில் சட்டமாக கொண்டு வந்து, பா.ஜ.க. கொள்கைகளை, அந்த ஆட்சியை எதிர்க்கக் கூடியவர்களை எல்லாம் பழிவாங்க வேண்டும் என்கிற நோக்கத்தில், மக்களுக்குத் துன்பங்களை, கொடுமைகளைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற அந்தத் தீய சக்தியோடு இன்றைக்கு அவர்கள் செய்து கொண்டிருக்கும் இந்தக் காரியங்களை எல்லாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.
ஏற்கனவே அரசியல்வாதிகளை, அவர்களை எதிர்க்கக் கூடியவர்களை எல்லாம் சி.பி.ஐ., ஐ.டி., அமலாக்கத்துறை என்ற அந்தத் துறைகளை எல்லாம் வைத்து மிரட்டிக் கொண்டிருக்கும் ஒரு ஆட்சி இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது.
எனப் பேசி உள்ளார்.