தேர்தலில் வாரிசுகளை களம் இறக்கும் கழகங்கள் … தேசிய கட்சிகளும் அதே பாதையில் பயணம்..
தமிழகத்தில் யார்? யாருடன் கூட்டணி என்பது இந்த நிமிடம் வரை திட்டவட்டமாக முடிவாகவில்லை.சில கட்சிகள் பகிரங்கமாகவும்,வேறு சில திரை மறைவில் ரகசியமாகவும் பேசிக்கொண்டிருக்கின்றன.
எனினும் தமிழகத்தில் பிரதான கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து விட்டன.இந்த முறை இரு கழகங்களிலும்,கட்சி தலைவர்களின் வாரிசுகளை காணலாம்.
இரண்டு கழகங்களிலும் கட்சியை வழி நடத்திய ஆளுமைகள் இல்லை. 2 ஆம் கட்ட தலைவர்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இயலும் என்ற சூழல் இரு திராவிட கட்சிகளிலும் நிலவுகிறது.
இதனை பயன் படுத்தி-2 ஆம் கட்ட தலைவர்கள் கட்சியின் தலைமை பீடத்தை அச்சுறுத்தி தங்கள் பிள்ளைகளை-மக்களவை க்கு அனுப்பும் திட்டத்தில் உள்ளனர்.
முதலில் அ.தி.மு.க.வட்டாரத்துக்கு வருவோம்.
இந்த கட்சி கடந்த 4 ஆம் தேதியில் இருந்து தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்கள் பெற்று வருகிறது. மனுக்களை கொடுக்க இன்று கடைசி நாள்.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் , முதல் நாளிலேயே மனு கொடுத்துள்ளார். அவரது தேர்வு-தேனி தொகுதி. ஓ.பி.எஸ். வீடு உள்ள பெரியகுளமும், அவரது தொகுதியான போடிநாயக்கனூரும்- தேனி மக்களவை தொகுதிக்குள் வருகிறது. அவர் தான் அ.தி.மு.க.வின் தேனி வேட்பாளர் என்பது 100% உறுதி என்கிறார்கள் கட்சி வட்டாரத்தில்.
தென் சென்னை எம்.பியாக ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் இருக்கிறார்.அவருக்கு அதே தொகுதியில் மீண்டும் ‘சீட்’கொடுக்கப்படும்.
அ.தி.மு.க.வை விட தி.மு.க. இந்த முறை வாரிசுகளை கணிசமாகவே களம் இறக்கும்.
தூத்துக்குடியில் கருணாநிதி மகள் கனிமொழி என்பது போல், மத்திய சென்னையில் முரசொலி மாறன் மகன் தயாநிதி என்பதும் தி.மு.க.தயாரித்து வைத்துள்ள மாதிரி வேட்பாளர் பட்டியலில் உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கள்ளக்குறிச்சியில் பொன்முடி மகன் கவுதம், வேலூரில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் ஆகியோருக்கும் டிக்கெட் உறுதி.
முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு,திண்டுக்கல் பெரியசாமி ஆகியோரும் தங்கள் மகன்களுக்கு ‘டிக்கெட்’ கேட்டு அடம் பிடிப்பதாக தகவல்.
தேசிய கட்சிகளும் ,திராவிட கட்சிகளுக்கு சளைத்தவர்களாக இல்லை.
சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம், ஆரணியில் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
டாக்டர் ராமதாஸ் மகன் அன்புமணி ,விஜய்காந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷ் ஆகியோரும் இந்த ரேசில் உள்ளனர். தொகுதிகள் தான் முடிவாகவில்லை.
—-பாப்பாங்குளம் பாரதி