சென்னை: தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27-ந்தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்தியரபிரதா சாகு தெரிவித்து உள்ளார்.
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5-ந் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும் என்றும் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படுவது வழக்கமான நடைமுறை. அதுபோல, இந்த ஆண்டும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறுகிறது. அந்த காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வு செய்யப்படும். இதற்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். பின்னர் வரும் ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியத் தேர்தல் ஆணையம், 29.05.2023 அன்று, 01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை அறிவித்தது. தற்போது, இந்தியத் தேர்தல் ஆணையம் 01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் அட்டவணையினை மாற்றியமைத்துள்ளது.
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 17.10.2023-க்கு பதிலாக 27.10.2023-ஆக மாற்றியமைத்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் மாற்றம் ஏதுமில்லாமல் 05.01.2024-ஆக உள்ளது. 01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2024-ன் போது கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் அளிக்க அனுமதிக்கப்பட்ட 27.10.2023 முதல் 09.12.2023 வரை உள்ள காலத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் / திருத்தங்கள்/ இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர் / தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றைப் பூர்த்தி செய்து அளிக்கலாம்.
25 வயதுக்குக் கீழுள்ள மனுதாரர்கள் வயதுச்சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைபேசி செயலி (VOTER HELPLINE Mobile App) ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
வரும் 01.01.2024, 01.04.2024, 01.07.2024 மற்றும் 01.10.2024 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் படிவத்தில் உள்ள உறுதிமொழியினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் வாக்காளரின் புகைப்படங்களின் தரத்தை மேம்படுத்தும் விதமாக விண்ணப்பதாரர்கள் 200 dpi resolution கொண்ட புகைப்படங்களை அளிக்க / தரவேற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6A நேரில் அளிக்கப்படவேண்டும் – அல்லது வாக்காளர் பதிவு அதிகாரிக்கு தபாலிலும் படிவத்தை அனுப்பலாம். வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6A நேரில் அளிக்கப்படும்போது அதனுடன் கூட விண்ணப்பதாரரின் புகைப்படம், ஏனைய பிற விவரங்களுடன் நுழைவிசைவின் (Visa) செயல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய கடவுசீட்டின் தொடர்புடைய பக்கங்களின் ஒளிநகலையும் சேர்த்து அளிக்கவேண்டும். வாக்காளர் பதிவு அதிகாரி மூல கடவுசீட்டினை ஒப்பிட்டுச் சரிபார்த்து உடனடியாக திரும்பக் கொடுத்துவிடுவார். படிவம் 6A தபாலில் அனுப்பப்படும்போது, கடவுசீட்டின் ஒளிநகல்கள் சுய சான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.
ஒரு வாக்காளர் தனது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6பி-இல் விண்ணப்பிக்கலாம். மேலும், தான் வசிக்கும் இருப்பிடத்தை ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாற்றினாலோ அல்லது தற்போது வசிக்கும் தொகுதிக்குள்ளேயே இடம் பெயர்ந்தாலோ அல்லது வாக்காளரின் விவரங்களில் திருத்தம் செய்ய வேண்டியிருந்தாலோ அல்லது இடம் பெயர்தல் / திருத்தம் / வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்து போதல் ஆகிய காரணங்களுக்காக மாற்று புகைப்பட அடையாள அட்டை பெற வேண்டியிருந்தாலோ படிவம் 8-ல் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.