திருமலை: ஜன.1 வரை திருப்பதி கோயிலுக்கு வர வேண்டாம்  என்று பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள திருப்பதி தேவஸ்தானம்,   திருப்பதியில் 9 மையங்களில் பக்தர்களுக்கு  வழங்கப்பட்டு வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது என  அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி முதல் 2024 ஜனவரி 1 வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்று ஏற்கனவே  அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  நாள் ஒன்றுக்கு ரூ.300 சிறப்பு தரிசனம் மூலம் 20,000 பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 50,000 பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் பிரவேம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொர்க்கவாசல் பிரவேசத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இந்த மாதம் ஆன்லைனில்  வெளியிடப்பட்டதுடன்.  இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்காக திருப்பதியில் 9 இடங்களில் கவுண்டர்கள் அமைக்கப்படு, தினசரி  50,000 டிக்கெட் என 10 நாட்களுக்கு சேர்த்து 5 லட்சம் டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. மேலும்,  ஆதார் அட்டை நகல்களை சமர்பித்து இலவச தரிசன டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி,  இலவச சர்வ தரிசன டோக்கன்கள் கடந்த டிச22ம் தேதி மதியம் 2 மணி முதல் வழங்கப்பட்டு வந்தது.  இதைத்தொடர்ந்து சொர்க்க வாசல் தரிசன  இலவச டோக்கன் விநியோகம் முடிந்ததால் ஜன.1 வரை திருப்பதி கோயிலுக்கு வர வேண்டாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த மாதம் 29-ம் தேதி நிகழ உள்ள சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் வரும் 28-ம் தேதி இரவு 7 மணிக்கு அடைக்கப்படும். மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். கோயில் முழுவதும் சம்பிரதாய ரீதியில் சுத்தம் செய்யப்பட்டு, சுப்ரபாத, தோமாலை, அர்ச்சனை ஆகிய சேவைகள் ஏழுமலையானுக்கு நடத்தப்படும். இதை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.