ரயில் நிலையங்களில் மக்களுக்கு இடையூறாக அரசியல் பரப்புரையில் கமல்ஹாசன் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தென்னிந்திய ரயில்வேயிடம் பத்திரிகையாளர்கள் சிலர் மனு கொடுத்திருக்கிறார்கள்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு வரும் ஏப்ரல் 4-ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச் சென்னையிலிருந்து, திருச்சிக்கு செல்கிறார் கமல்ஹாசன்.
வரும் 3ம் தேதி, வைகை விரைவு தொடர்வண்டியில் பயணிக்கிறார். இந்தப் பயணத்தின்போது இடையில் உள்ள ரயில் நிலையங்களில் அவர் தொண்டர்களைச் சந்திக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
இது குறித்து சாவித்திரிகண்ணன், ஜாபர் அலி, சமூக ஆர்வலர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் தென்னக ரயில்வே மேலாளரிடம் மனு அளித்துள்ளனர்.
அதில், “திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்குச் செல்லும் வழியில் இடையில் உள்ள ரயில் நிலையங்களில் கமல்ஹாசன் தொண்டர்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார். எழும்பூரிலிருந்து திருச்சி வரை 9 ரயில் நிலையங்களில் அவர் தொண்டர்களைச் சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இது பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தும். குறிப்பிட்ட ரயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். அதே நேரத்தில் வரும் வேறு ரயில்களில் பயணிப்போரும் கூட்ட நெரிசலில் அவதிப்படுவர். இதனால் விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
நடிகர் ஷாருக்கான் இவ்வாறு ரயிலில் பயணம் செய்யும்போது இரண்டு உயிர்கள் பலியானதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே, பொதுமக்கள் பயணிக்கும் ரயிலை அரசியல் மேடையாகப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து சாவித்திரி கண்ணன், “மற்றவர்களைப்போல கமல்ஹாசன் ரயிலில் பயணிப்பதில் பிரச்சினை இல்லை. எத்தனையோ வி.வி.ஐ.பி.க்கள் ஆர்ப்பாட்டம் இன்றி ரயிலில் பயணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் கமல்போல அறிவித்துவிட்டு பயணித்தால் கூட்டம் கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும்” என்றார்.