புனே:

சுதந்திர போராட்ட வீரர் ராஜகுருவை ஆர்எஸ்எஸ் அமைப்போடு தொடர்புபடுத்த வேண்டாம் என்று அவரது வாரிசுகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் முன்னாள் உறுப்பினரும், பத்தரிக்கையாளருளான நரேந்தர் ஷெகல் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அதில், 1931ம் ஆண்டு பகத் சிங், சுக்தேவ் ஆகியோருடன் தூக்கு மேடை ஏறிய ராஜகுரு ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜகுருவின் பேரன்களான சத்தியசீல் மற்றும் ஹர்ஷ்வர்தன் ராஜகுரு ஆகியோர் ஒரு மராத்தி டிவி சேனலுக்கு அளித்த பேட்டியின் போது கூறுகையில், ‘‘ ராஜகுரு ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்பதற்கு எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. எங்களது தாத்தாவும் இது குறித்து எங்களிடமும் தெரிவிக்கவில்லை.

அவர் நாக்பூரில் நீண்ட நாட்கள் தங்கியிருந்தது உண்மைதான். இதற்கான ஏற்பாடுகளை ஆர்எஸ்எஸ் அமைப்பு செய்து கொடுத்திருந்தது. ராஜகுரு ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு புரட்சியாளராக இருந்தார். அதனால் அவரது பெயரை எந்த தனிப்பட்ட அமைப்புடனும் இணைத்து பேசக் கூடாது’’ என்று தெரிவித்துள்ளனர்.

ஆர்எஸ்எஸ் நாக்பூர் தலைமை அலுவலகமான மோகிதே பாக் ஷக்காவுக்கு ராஜகுரு வந்திருந்தாரா? என்பது குறித்து வைத்யா கூறுகையில், ‘‘ராஜகுரு நாக்பூர் கிளைக்கு வருகை புரிந்துள்ளார். புரட்சியாளர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த ஆர்எஸ்எஸ் நிறுவனர் ஹெட்ஜிவார், ராஜகுரு தங்குவதற்கு சில ரகசிய சில ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்க கூடிய வாய்ப்பு இருக்கிறது’’ என்றார்.