லக்னோ:

உத்தரபிரதேச அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒய்வுபெறும் நாளில் வகுப்பறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 31ம் தேதி வகுப்பறையில் இருந்து புகை வந்ததை அங்கு வேலை செய்த ஒரு கொத்தனார் பார்த்துள்ளார். தகவலறிந்த சக ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் விரைந்து வந்து பார்த்தபோது தலைமை ஆசிரியர் ஓம்பிரகாஷ் பட்டேரியா (வயது 60) தீக்குளித்து தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அன்றைய தினத்துடன் அவர் ஓய்வுபெறுவதால் சில நடைமுறைகளை பூர்த்தி செய்வதற்காக மாலை நீண்ட நேரம் பள்ளியில் இருந்துள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் வகுப்பின் கரும் பலகையில் குறிப்பு எழுதி வைத்துள்ளார். அதில் பள்ளியில் நடக்கும் ஊழலை நான் வெளிப்படுத்தினேன். அதனால் பள்ளி அதிகாரிகளும், கிராம பஞ்சாயத்தார்களும் சேர்ந்து எனது 6 மாத கால சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளனர். லஞ்சம் வழங்க மறுத்தது தான் இதற்கு காரணம் என்று குறிப்பட்டிருந்தார்.

கிராம பஞ்சாயத்தை சேர்ந்த மோகன் சிங், மதிய உணவு ஒருங்கிணைப்பாளர் கபில் துபே, மாணவர்கள் கண்காணிப்பு குழு தலைவர் சோகன் சிங் மற்றும் புந்தி ராஜா, ரூபேஷ் குமார் நிரஞ்சன் ஆகியோர் தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்காக அவரை துன்புறுத்தியுள்ளனர். மோகன் சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர். இதர நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.