சிறப்புக்கட்டுரை: கோதண்டராமன் சபாபதி

மூன்று எழுத்தாளர்கள் எழுதிய மூன்று சிறுகதைகளுடன் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

சுஜாதா- நகரம்.

ஒரு தாய் தன் மகளுக்கு வந்திருக்கும் இனம் புரியாத வியாதிக்கு மருத்துவம் பார்க்க நகரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கூட்டிச்செல்கிறாள்.

அந்த தாயும் மகளும் அங்கும் இங்கும் அலை கழிக்கப்படுகிறார்கள்.இறுதிவரை முறையான சிகிச்சை அளிக்கப்படவே இல்லை. அவர்களை கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

கதையின் இறுதியில் தலைமை மருத்துவர் எதார்த்தமாகவோ எப்படியோ அந்த சிறுமியின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை பார்ப்பார். அதி அவசர சிகிச்சை அளிக்கப்படவேண்டிய நோயாளி என்பதை பார்த்த உடனே உணர்ந்து அதிர்வார். எங்கே அந்த நோயாளி என்று பரபரப்பாக கேட்பார் மருத்துவர்.

படிக்கிற நமக்கும் அந்த பரபரப்புஇயல்பாகவே தொற்றிக்கொள்ளும். என்ன ஆனாளோ அந்தச்சிறுமி என்று மனம் பதைக்கும்.

கிராமத்து கோயில் ஒன்றில் சிறுமியை கிடத்திவைத்து கடவுள் துணையை வேண்டுவதாக கதை முடியும்.

மருத்துவமனை அலட்சியங்கள் பொட்டில் அடித்தாற்போல நம்மில் பதியும்.

ஜெயகாந்தன்- நந்தவனத்தில் ஓர் ஆண்டி.

ஒரு சுடுகாடு ஒன்றில் ஒரு தம்பதியர் வசிப்பர். அவர்களுக்கு குழந்தைப்பாக்கியம் கிடையாது. பிணங்களை எரிப்பதும் புதைப்பதும்தான் கணவனின் வேலை.

ஒவ்வொருமுறை பினங்களை புதைக்கும்போதும்
” நந்தவனத்திலொரு ஆண்டி  நாலாறு மாதமாய் குயவனை வேண்டி ஒரு பானை செய்தாண்டி,
அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி”
என்று பாடிக்கொண்டே பினங்களை புதைப்பான். பாடுவானே தவிர அதன் அர்த்தம் அவனுக்குத்தெரியாது.

குழந்தையற்ற அந்த தம்பதிகளுக்கு குழந்தைக்கான அறிகுறி தெரிகிறது. மனைவி மகிழ்வுடன் அறிவிக்கிறாள்
.கணவனும் மகிழ்கிறான். குழந்தை பிறக்கப்போகும் அந்த நாளை மகிழ்வோடு எதிர்நோக்கு கிறார்கள்.

அந்தோ.! பரிதாபம்.குழந்தை இறந்தே பிறக்கிறது. மனைவி வேதனையில் அழுகிறாள்.

இறந்த குழந்தையை வழக்கமாக பாடும் அதே நந்தவனத்திலோர் ஆண்டி பாட்டை முனு முனுத்தவாறே அவனே புதைக்கிறான் . இப்போது அந்த பாட்டின் அர்த்தம் அவனுக்கு புரிகிறது.
அதன்பிறகு அவன் அந்த பாடலை பாடவே இல்லை.

இப்படி முடியும் இந்த சிறுகதை.

உறவின் பிரிவை பிரிவுத்துயரை நச்சென்று சொல்லும் இந்தக்கதை.

அசோகமித்திரன்- ஒரு ஜதை இருப்புப்பாதை.

ஒரு இளைஞன் ஒரு பெண்ணை ஒருதலையாக காதலிக்கிறான். காதலை சொல்லும் மனதிடம் அவனிடம் இல்லை.காதல் அவனை வாட்டி வதைக்கிறது. தற்கொலை செய்துகொள்ள முடி வெடுக்கிறான்.

அருகில் உள்ள இருப்புப்பாதையில் போய் படுத்து கொள்கிறான்.இரயில் நெருங்குகிறது. தான் யாருக்காக சாகப்போகிறோம் என்பதே தெரியாமல் போய்விடப்போகிறதே என்று வருந்துகிறான்.

எதையும் செய்ய அவகாசம் இல்லாததால்
கண்களை மூடிப்படுத்துக்கொள்றான். தற்கொலை முடிவு தவறானது என்று கடைசி நிமிடத்தில் உணர்கிறான்.

தடதடக்கும் ஓசையுடன் ரயில் கடக்கிறது.

இப்படி அநியாயமாக சாகிறோமே என்று வேதனையோடு நாமும் செத்தே விடுவோம் அந்த ரயிலோசையில்.

செத்துப்போன நம்மையும் கதைநாயகனையும் எழுப்பிவிடுவார் அசோகமித்திரன்.  ஆம். இரண்டு ஜதை இருப்புப்பாதையில் வேறொன்றில் சென்றிருக்கும் ரயில்.

உயிர்பிழைத்த நாயகன் ஒரு தெளிவு பிறந்தவனாக எழுந்து நடப்பான்.

மூன்று கதைளையும் என் ஞாபகத்தில் இருந்தபடி எழுதியிருக்கிறேன்.

இதை யாருக்கான கதை என்பீர்கள்.? ஆரியர்களுக்கான கதையா? திராவிடக்கதை என்பீர்களா? பணக்காரனுக்கான கதையா? ஏழைக்கதை என்பீர்களா?

மனிதர்களுக்கான கதை. அலட்சியத்தால் ஏற்படும் பரிதவிப்பு, உறவின் பிரிவுத்துயரம், ஒரு முட்டாள்தனத்திலிருந்து பிழைத்துக்கொண்ட மகிழ்ச்சி இவை எல்லா மனிதர்களுக்கும் ஆனவைதானே.?

சமீபத்தில் எழுத்தாளர் அசோகமித்திரன் இயற்கை எய்தினார். இணையத்தில் சில இரங்கல் குரல் கேட்டது. அதே அளவு விமர்சனங்களும் வருகின்றன.

இது புதிதல்ல. சுஜாதா ஜெயகாந்தன் ஆகியோரின் இறப்புகளின்போதும் இப்படிதான் நடந்தது. இவர்களின் இறப்புகளின்போது குறிப்பிடும்படியான நல்ல சிறுகதைகளையே எழுதியதில்லையா?

அனைத்து படைப்புகளும் சரியாக தந்தவர்களின் படைப்புகளைதான் ரசிக்கவேண்டும் என்றால் இங்கு மிஞ்சுவது சிலரே!

சிறுகதை எழுத்துக்களை ரசிப்பதில் ஒரு சௌகரியம் குறிப்பிட்ட கதைகளை மட்டும் ரசிக்கலாம். சிலாகிக்கலாம்.ஆகாதவற்றை புறந்தள்ளலாம்.

படைப்பாளிகளை போற்றவேண்டாம். நல்ல படைப்புகளை போற்றலாம். நல்ல இலக்கியங்கள் மனித உணர்வுகளை படிக்க உதவும் பாடப்புத்தகங்கள்.