மெரிக்க  அதிபர் தேர்தலில்  குடியரசு கட்சியின் சார்பாக போட்டியிடும்  டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனை,  ‘சாத்தான்’ என்று வர்ணித்ததுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின்  பென்சில்வேனியாவில் நடந்த பேரணியில் உரையாற்றியபோதுதான் டிரம்ப்,  ‘ஹிலாரி கிளின்டன் ஒரு சாத்தான்” என்று பேசினார்.  இது அவரது சொந்த கட்சியான குடியரசுகட்சியினரிடேயும் விவாதத்தை எழுப்பி உள்ளது.
“டிரம்ப் இதுபோல தொடர்ந்து பேசி வந்தால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியாது” என்று அக் கட்சியினரே கவலை  தெரிவிக்கிறார்கள்.

ஹிலாரி - டிரம்ப்
ஹிலாரி – டிரம்ப்

தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் டிரம்ப், சமீபத்தில் ஒரு விவகாரத்தில் சிக்கினார்.   இராக் போரில் அமெரிக்க ராணுவ கேப்டன்  ஹுமாயுன் கான் கொல்லப்பட்டார்.  ஹூமாயின் கானின் பெற்றோர், “அமெரிக்கா என்பது நம் அனைவருக்குமான தேசம். இந்த தேசத்துக்காகத்தான் என் மகன் உயிரை அர்ப்ணித்திருக்கிறான்.  ஆகவே இன, மத ரீதியான பிளவுகள் அமெரிக்கர்களுக்குள் வேண்டாம்” என்றார்.  அதோடு இது குறித்து டிரம்ப்பிடம் நேரடியாகவும் கேள்வி எழுப்பினார்.  இதற்கு டிரம்ப், இன துவேஷத்துடன் பதில் அளித்தார்.
இப்போது டிரம்ப், ஹிலாரியை மோசமாக விமர்சித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.  ஏற்கெனவே இஸ்லாமியர்கள் மற்றும் ஆசிய நாட்டவர் குறித்து கடுமையான கருத்துக்களை டிரம்ப் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.