நியூயார்க்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது ரகசிய ஆவணங்கள் வழக்கில் 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

முன்னாள் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் பதவியை விட்டு விலகும் போது பல ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது.   அவர் எடுத்துச் சென்ற சுமார் 200 ஆவணங்களை திருப்பி அளிக்குமாறு அரசு தரப்பில் கேட்டுக் கொண்டும் அவர் அவ்வாறு செய்யவில்லை எனக் கூறப்பட்டு 7 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இது குறித்து அவர் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தம்மை மியாமி நீதிமன்றத்தில் இது தொடர்பாக வரும் செவ்வாய் அன்று நேரில் ஆஜராக வேண்டும் எனச் சம்மன் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும், “நான் குற்றமற்றவன்.  ஒரு முன்னாள் அமெரிக்க அதிபர் அதுவும் வரலாறு காணாத அளவுக்கு அதிக வாக்குகள் பெற்றவருக்கு இப்படி ஒரு நிலை வரும் என எண்ணவில்லை.   அமெரிக்க வரலாற்றில் இது ஒரு கருப்பு நாளாகும்.   நாம் அனைவரும் இணைந்து அமெரிக்காவை ஒரு ஒழுங்கான நாடாக மாற்ற உழைப்போம்’ எனத் தெரிவித்துள்ளார். 

வரும் 2024 ஆம் வருட தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ள டிரம்ப்புக்கு இது ஒரு பின்னடைவு எனக் கருதப்படுகிறது.  இது குறித்து இந்த வாரத் தொடக்கத்தில் டிரம்பின் வழக்கறிஞர்கள் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி ஸ்மித் உள்ளிட்ட பலரை சந்தித்துள்ளனர். 

டொனல்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள 7 குற்றச்சாட்டுகளின் விவரம் குறித்து இதுவரை எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும் இது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என்பதில் ஐயம் இல்லை.  இது ஒரு முன்னாள் அதிபர் மீது சுமத்தப்பட்ட முதல் குற்றவியல்  குற்றச்சாட்டு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.