இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மக்களின் அச்ச உணர்வை வெவ்வேறு வகையில் சோதித்து பார்த்து வருகிறது.

கொரோனாவுக்கு அஞ்சி நோய் தொற்றில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு வழிகளை கடைபிடிக்கின்றனர், ஏற்கனவே மதத்தின் பெயரால் பல்வேறு மூட நம்பிக்கைகளுக்கு ஆளாகி இருக்கும் மக்களை, அவர்களின் மத நம்பிக்கையின் பெயரால் இப்படி செய்தால் கொரோனா வராது அப்படி செய்தால் கொரோனா வராது என்று சாமானியன் முதல் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் வரை கூறி அவர்களை சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளைகளாகவே வைத்திருக்கின்றனர்.

குஜராத் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் உள்ள ‘கோ’ சாலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பசு சாணத்தையும் கோமியத்தையும் கலந்த சாந்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை உடல் முழுக்க பூசிக்கொண்டு, பசுவை கட்டிப்பிடிப்பது வணங்குவதில் துவங்கி, சிறிது நேரம் வெயிலில் நின்று சாணம் உலரும் வரை யோகாசனம் செய்து, பின் பால் அல்லது மோரில் உடலை சுத்தம் செய்துவிட்டு குளிக்கின்றனர்.

இப்படி செய்தால் கொரோனா வைரஸ் மட்டுமல்ல எந்த வைரஸும் அண்டாது என்ற அண்ட புளுகை நம்பி அகமதாபாத் நகரில் உள்ள பல்வேறு மடங்களுக்கு சொந்தமான கோ சாலைகளுக்கு வாரம் ஒருமுறை மக்கள் கூட்டம் அலைமோதுகிறது, இதில் சில மடங்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தரும் பள்ளிக்கூடங்களை வைத்து நடத்துவது வேதனையான உண்மை.

எதை தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் மக்களை ஏமாற்ற, புற்றீசல் போல பெருகிவரும் இதுபோன்ற புத்துணர்ச்சி முகாம்கள் மீது நடவடிக்கை எடுத்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டிய அரசோ இதுகுறித்து எதுவும் கூறாமல் மவுனமாக உள்ளது.

அதே நேரத்தில், மருத்துவர்களோ அப்படி செய்வதால் விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவ கூடிய வேறு சில தொற்று நோய்கள் பரவ கூடிய அபாயம் உள்ளது என்றும், இதுபோன்ற புத்துணர்ச்சி மையங்களுக்கு கூட்டம் கூட்டமாக செல்வதால் தொற்று நோய் பரவுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கிறார்கள்.

தற்போதுள்ள நிலையில் நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களில் யாரை காப்பாற்றுவது என்பது ஆண்டவன் கைகளில் தான் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மேலும், சாணத்தை பூசிக்கொள்வதால் கொரோனா தொற்று வராது என்பதற்கு எந்தவிதமான அறிவியல் பூர்வமான சான்றும் இல்லை என்று கூறுகின்றனர்.