ஐதராபாத்: தெலுங்கானாவில்  கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில்,  12ந்தேதி முதல் ( நாளை) 22ந்தேதி வரை  10 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாநில முதல்வர் சந்திரசேகராவ் அறிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. உருமாறி நிலையில், எந்தவித அறிகுறியும் இல்லாமல் பரவும் தொற்று காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, தொற்று பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே  தமிழகம், கர்நாடகம்,  ஆந்திரா,, டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா,  பஞ்சாப், அரியானா, பீகார், ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், இமாச்சலபிரதேசம், மிசோரம், நாகலாந்து மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தெலுங்கானாவிலும் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக அறிவித்து உள்ளது.  அத்தியாவசிய தேவைகளுக்காக   காலை 6 மணி முதல் 10 மணி வரை என நான்கு மணி நேரம் மட்டுமே கடைகள்  திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாமியர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து தொழுகை நடத்தியது  தொடர்பான வீடியோ வைரலானது. இதையடுத்து பல பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து,  கோவிட் பரவல் அபாயங்களைக் குறைக்க தெலுங்கானா அரசாங்கம் பெரிய கூட்டங்களைத் தடை செய்தது. அத்துடன்  ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று முதல்வர் சந்திரசேகராவ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும்,  கோவிட் 19 தடுப்பூசி வாங்குவதற்கான உலகளாவிய டெண்டர்களை அழைக்க அமைச்சர்கள் கவுன்சில் முடிவு செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.