சென்னை: நோயாளியின் மகனால் கத்தியால் குத்தப்பட்ட சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் டாக்டர் பாலாஜி, தற்போது தாம் நலமுடன் உள்ளதாக தெரிவித்து உள்ளார். அவர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் தனது தாயாருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல், தங்களது கேள்விகளுக்கும் முறையான பதில் தெரிவிக்காததாலும் ஆத்திரமடைந்த நோயாளியின் மகன் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் ஸ்டிரைக் அறிவித்தனர்
இதைத்தொடர்ந்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவர்களை சந்தித்து பேசினார். அவரது உறுதிமொழியை ஏற்று மருத்துவர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், “தாக்குதலுக்குள்ளான மருத்துவர் பாலாஜி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவரை பொறுத்தவரையில் நலமுடன் இருக்கிறார். சிறிது நேரத்திற்கு முன்னர் வீடியோ காலில் உரையாற்றினார். ருத்துவர் மிக மிக நலமுடன் இருக்கிறார் என்பது சிறிய அளவிலான நிம்மதியைக் கொடுக்கிறது. இவர் தமிழக அரசின் சார்பில் பல்வேறு மருத்துவ சேவைகளைத் தந்தவர் என தெரிவித்தார்.
மேலும் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ்வரனின் தாயார் காஞ்சனா என்பவர் கடந்த ஆறு மாதங்களாக மருத்துவமனையில் புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார். அட்வான்ஸ் ஸ்டேஜ் என்ற வகையில் முற்றிய அளவிலான புற்றுநோய் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஆறு, ஏழு முறை சீமோதெரபி போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டிருக்கிறது.
விக்னேஷ்வரன் தனது தாய்க்கு, மருத்துவர் சரி இது சரியான சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவரிடம் பேசியபோது, அவர்மீது தாக்குதல் நடத்தி உள்ளார். இந்த போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது. எந்த மருத்துவர்களும் மருத்துவ சேவையில் நிச்சயம் தவறிழைக்க மாட்டார்கள். அரசு மருத்துவர்களைப் பொருத்தவரை மிகச் சிறந்த வகையில் தாங்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் வாயிலாகக் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த மருத்துவர்கள் மீது தாக்குதல் என்பது கண்டிக்கத்தக்கது.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவரை காவல்துறையினர் உடனடியாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தை முடித்து மருத்துவ சங்க பிரதிநிதிகள் மகிழ்ச்சியுடன் சென்று உள்ளனர். அனைத்து மருத்துவ சங்கங்ளும் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளன.
மருத்துவமனைக்கு கூடுதல் பாதுகாக்க வேண்டும் என்று மருத்துவ சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர். எனவே மருத்துவர்கள் பாதுகாப்பு குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் புறக் காவல் நிலையம் அமைக்கப்படும். அனைத்து அரசு மருத்துவமனையிலும் சிசிடி கேமரா பொருத்தும் பணி நடைபெறுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமராவை பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளன வட்டார துணை மருத்துவமனைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜி, தற்போது நலமுடன் இருப்பதாக தன்னை சந்திக்க சக மருத்துவர்கள் மற்றும் அவரது உறவினர்களிடம் கூறினார்.
அவர் மருத்துவமனை பெட்டில் அமர்ந்துகொண்டு பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.