சென்னை:
நாட்டில் தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், ஊரடங்கு மேலும் சில வாரங்கள் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களுக்கும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில் தீவிரமாகி வருகிறது. இன்று காலை நிலவரப்படி, நாடு முழுவதும் கொரோனா  24,942 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  5,210 பேர் குணமாகி உள்ளனர். அதே வேளையில் பலி எண்ணிக்கையும் 779 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் கொரோனா ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

 

இருந்தாலும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சில மாநிலங்களில்  மேலும் சில நாட்கள் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நாளை பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதன்பிறகே  ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்,  கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால்  டில்லி, மஹாராஷ்டிரா, மேற்குவங்கம், பஞ்சாப், ஒடிசா ஆகிய 5 மாநில அரசுகள்,  தங்கள் மாநிலங்களில் ஊரடங்கை மே.16 வரை நீட்டிக்க கோரிக்கை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து நாளைய பிரதமருடனான கலந்துரையாடலின்போதும் வலியுறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதுபோல தமிழகத்திலும்,  சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், சென்னை உள்பட சில மாவட்டங்களில்  மேலும் சில நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

என நாளை (ஏப்.27) நடக்க உள்ள மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமரிடம் இதுகுறித்து மாநில முதல்வர்கள் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.