வளர்மதி

தற்போது தமிழகத்தில் அதிகம் அடிபடுவது “குண்டர் சட்டம்” என்ற வார்த்தைதான்.  கடந்த மே மாதம், சென்னை மெரீனா கடற்கரையில் ஈழத் தமிழர்களுக்காக நினைவேந்தல் நிகழ்வை நடத்த முயன்ற மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தற்போது, சேலத்தில் கல்லூரி ஒன்றின் வாயிலில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்துக்கொண்டிருந்த வளர்மதி என்ற மாணவி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு சம்பவங்களும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கட்சிகளும் இந்நடவடிக்கைகளை கண்டித்துள்ளன.

குண்டர் சட்டம் என்றால் என்ன?

இது “குண்டர் சட்டம்” என்று சுருக்கமாக கூறுகிறார்கள். உண்மையில், இது “குண்டர் தடுப்பு சட்டம்”.

அதே நேரம் மேலே சொல்வது, பேச்சு வழக்கில்தான். சட்டப்படி இது, “தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம்” என்பதாகும்.

இன்னும் விரிவாக சட்டப்படி சொல்வதென்றால், . “தமிழ்நாடு கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், போதைப் பொருள் குற்றவாளிகள், குண்டர்கள், பாலியல் தொழில் குற்றவாளிகள், குடிசை பகுதி நிலங்களைப் பறிப்போர், மணல் திருட்டு குற்றவாளிகள், திருட்டு வீடியோ குற்றவாளிகளின் அபாயகரச் செயல்கள் தடுப்புச் சட்டம்” என்பதாகும்.

.இந்தச் சட்டத்தின் மூலம் அதிகாரிகள் எவர் ஒருவரையும் சிறையில் அடைக்க முடியும். மாநகர்ப்புறங்களில் காவல் துறை ஆணையரும் கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்கள்.

குண்டர்கள் என்ற வார்த்தையின் வரையறையை விளக்கும்போது, இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 16, 17, 22, 45 ஆகியவற்றின் கீழ் வரும் குற்றம் எதையாவது செய்யக்கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவைச் சேர்ந்தவர்  என்று கருதினாலே அவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.

திருமுருகன் காந்தி

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டது சரியா என்பதை நீதிபதி உள்ளிட்டோரைக் கொண்ட ஆலோசனைக் குழு முடிவு செய்யும். அந்தக் குழு சரிதான் என்று முடிவு செய்தாலும் உயர் நீதிமன்றத்தை அணுகி சம்பந்தப்பட்டவர் நிவாரணம் பெற வாய்ப்பு உண்டு.

குண்டர் சட்டம் உறுதி செய்யப்பட்டால், அந்த நபரை 12 மாதங்கள் தொடர்ந்து சிறையில் அடைக்க முடியும்.  மாநில அரசு விரும்பினால் முன்கூட்டியே விடுவிக்க வாய்ப்பு உண்டு.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நபர் நிபந்தனைகளை மீறினால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்பது சட்டம்.

2004 இல் திருட்டு வீடியோ, சி.டி குற்றமும் , 2006இல் மணல் கடத்தல் மற்றும் குடிசை நில அபகரிப்பு குற்றங்களும் இதன் கீழ் சேர்க்கப்பட்டன .

பிற சட்டப்பிரிவுகளைவிட குண்டர் சட்டத்தில் அடைத்தால் பல்வேறு உரிமைகள் மறுக்கப்படும். விசாரணை இன்றி ஒரு வருடம் சிறை என்றால், பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒருவர் குற்றம் புரிவதற்கு முன்பே அதைத் தடுப்பதற்காக கைது செய்யப்படும் தடுப்புக்காவல் சட்டத்தைச் சேர்ந்தது இந்த குண்டர் சட்டம்

·கைது செய்யப்பட்டவர்களுக்கு ஒரு வருடம் கட்டாய சிறைவாசம்தான்.  பிணை கிடையாது

எவ்வித நீதிமன்ற விசாரணையுமில்லை.

கைது செய்யப்பட்டவர் முறையீட்டு குழுவைத்தான் அணுக வேண்டும். இது ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி, ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி, ஒரு அமர்வு நீதிபதி ஆகியோரைக் கொண்ட ஒரு நிர்வாகக் விசாரணைக் குழு ஆகும்.

·கைது செய்யப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் வாதிட இயலாது.கைது செய்யப்பட்ட நபரோ, அல்லது அவர் நண்பரோ உறவினரோ தான் முறையிட முடியும்.

“குண்டர் சட்டம்” என்பது எத்தனை நெருக்கடியானது என்பது புரிகிறதா?

ஈழத்தமிழர்களுக்காக அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றியதற்காக திருமுருகன்காந்தியும், கதிராமங்கலம் போராட்டத்துக்கு நோட்டீஸ் கொடுத்த வளர்மதியும் இந்த “குண்டர் சட்டத்தின்” கீழ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.