சிலைகளை அறையில் பூட்டி வைக்கவா இந்துசமய அறநிலையத் துறை? உயர்நீதி மன்றம்

Must read

சென்னை:

சிலை கடத்தல் தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதி மன்ற நீதிபதி, சிலைகளை அறையில் பூட்டி வைக்க இந்து சமய அறநிலையத் துறை செயல்படுகிற எதற்கு என்று கேள்வி எழுப்பினார்.

தமிழக கோவில்களில் திருடு போயுள்ள சாமி சிலைகள் தொடர்பான வழக்கில், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்க வேல் விசாரிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து  ஜ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் சிலைக் கடத்தல் சிறப்பு பிரிவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டது. மேலும், சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளையும் உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் வழங்கி இருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, தமிழக அரசின்  இந்து சமய அறநிலைய துறை சார்பில் 21 வழிமுறைகளில், 5 கோரிக்கைகளை நிறைவேற்றி தர தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஐஜி பொன் மாணிக்க வேல் சார்பில், சிலைகளை பாதுகாக்க அறநிலைய துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை… இதனால் பல சிலைகள் அழியும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சரமாரியாக கேள்விகளை விடுத்த நீதிமன்றம்,   50 ஆண்டுகள் பழமையான சிலைகளை இருட்டு அறையில் வைப்பதற்கு இந்து சமய அறநிலையத் துறை ஏதற்கு என்று கேள்வி எழுப்பியது.

வழக்கை விசாரித்து வரும் நீதிபதி மகாதேவன், தான் நேரில் சென்று பார்த்த 1,700 கோவில்களிலும் இதே நிலை தான் தொடர்ந்து வருகிறது என்றும்,

ஏற்கனவே  உயர் நீதிமன்றம் பிறப்பித்த 21 வழிமுறைகளை எப்படி  நிறைவேற்றுவது என்பது குறித்து,  இந்து சமய அறநிலையத் துறை ஆணையர்,  ஐஜி பொன் மாணிக்க வேல், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் கலந்தாலோசித்து வரும் 23 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

More articles

Latest article