டெல்லி: மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கி விடாதீர்கள், பத்திரமாக வைத்திருங்கள் என மத்தியஅரசு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 178,02,83,222 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், மக்களிடையே தடுப்பூசி எடுத்துக்கொள்வதிலும் மெத்தனம் எழுந்துள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களில் தேங்கியுள்ள தடுப்பூசிகள் மற்றும் காலாவதி ஆகும் தடுப்பூசிகளை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன்பும் மேற்கு வங்கம், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிர மாநில அரசுகளுக்கு இதுதொடர்பாக மத்தியஅரசு கடிதம் எழுதி இருந்தது.
இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களில், விரைவில் காலாவதியாகும் மருந்துகளும், அரசு தடுப்பூசி மையங்களில் காலாவதியாக அதிக நாள்களைக் கொண்ட மருந்துகளும் இருப்பதை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், தனியார் தடுப்பூசி மையங்களிலும், அரசு தடுப்பூசி மையங்களிலும் எந்த வகையிலும் கரோனா தடுப்பூசிகள் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் புள்ளிவிவரத்தின் அடிப்படையில், இன்று காலை நிலவரப்படி, நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை பயன்படுத்தாத 15.19 கோடி கரோனா தடுப்பூசிகள் மாநிலங்களின் கையிருப்பில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.