சென்னை:
மிகப் பெரிய தலைவனாக வரவேண்டிய ஒருவன்,  இப்படி தற்கொலை முடிவை எடுத்துவிட்டான் என்று  தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷ்  குறித்து வேதனை  தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சீமானுடன் விக்னேஷ்
சீமானுடன் விக்னேஷ்

காவிரி நீர் உரிமை கோரி, நாம் தமிழர் கட்சி நடத்திய பேரணியில் கலந்துகொண்ட விக்னேஷ், ஊர்வலத்தின் போதே தன் மீது பெட்ரோல் ஊற்றி, தீ வைத்துக்கொண்டார். 95 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “விக்னேஷ். ஏதோ ஓர் ஆர்வத்தில் அமைப்பிற்குள் வந்தவன் அல்ல. மிகப் பெரிய தலைவனாக வரவேண்டிய ஒருவன், இப்படியொரு நிலையை எடுத்துவிட்டான்.
முகநூலைப் பார்க்கும் வழக்கம் எனக்கு இல்லை. ‘விளையாட்டாக எழுதியிருக்கிறான்  என்று நினைத்துவிட்டார்கள். பேரணிக்குள் வந்துவிட்டு எனக்கு ஒரு வணக்கம் வைத்தான். அதன்பிறகு எங்கு போனான் என்று தெரியவில்லை.
நான் என் பிள்ளைகளை சொல்லிச் சொல்லி வளர்க்கிறேன். இதுபோன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது என்றுதான் நாள்தோறும் அவர்களிடம் பேசுகிறேன். எங்கள் கட்சியின் உறுப்பினர் படிவத்தில் உள்ள உறுதிமொழியில் இதையும் ஒன்றாக இணைக்க விரும்புகிறேன்” என்று சீமான் தெரிவித்தார்.