சென்னை,

நிலவேம்பு குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார், தொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அவருடன் அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

பின்னர் செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது.

மாவட்ட மருத்துமனையில் டெங்கு குறித்து ஆய்வு செய்ததாகவும் 245 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வும்,30 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். மருத்துவத்துறையில், கடந்த மாதம் மட்டும் 1,113 காலி இடங்கள் நிரப்பட்டுள்ளது. உடனடியாக 744 பேர் மருத்துவர்கள் நியமிக்கவும், மேலும் 2000 பணியாளர்களை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய குழுவானது டெங்கு ஆய்வு முடித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம்  சமர்ப்பிக்க உள்ளது.

இதுவரை டெங்குவால் இரண்டு பேர் மட்டுமே திருவள்ளூர் மாவட்டத்தில் உயிர் இழந்துள்ளனர். டெங்கு உயிரிழப்பை தடுக்க 131 எலிசா மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. தொடர்ந்து டெங்கு குறித்த விழிப்புணர்வு விடியோ  சமூக வலைதலைங்களில் வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து  சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில்   காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை புதன்கிழமை (இன்று) மதியம் அமைச்சர் விஜயபாஸ்கர் பார்த்து ஆறுதல் கூறினார். அவர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருகிறது. 15 நாட்களில் காய்ச்சலின் தாக்கம் முழுவதும் கட்டுப்படுத்தப்படும். சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு மருத்துவ குழு அனுப்பப்பட்டுள்ளது.

நிலவேம்பு கசாயம் குடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. மலட்டுத்தன்மை வராது. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். பொது மக்கள் காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு கூறினார்.