சென்னை

ம்புலன்ஸ் கட்டணம், பால் விலை குறைப்பு குறித்து தவறான செய்திகள் பரப்ப வேண்டாம் என முதல்வர் மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று புதிய அரசு அமைத்துள்ளது.  புதிய அரசின் முதல்வராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுள்ளார்.  அவர் பதவிக்கு வந்த பிறகு ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைத்தார்.  மேலும் தனியார் ஆம்புலன்சுகளில் அதிக கட்டணம் வசூல் புகார் வந்ததால் கட்டணத்தை நிர்ணயம் செய்தார்.

இந்த இரு நடவடிக்கைகள் குறித்து தவறான தகவல்கள் அளித்து சமூக வலைத் தளங்களில் கடும் விமர்சனம் எழுந்தது.  ஆவின் பால் விலையில் லிட்டருக்கு ரூ. 6 விலை ஏற்றி விட்டு அதில் இருந்து ரூ.3 குறைத்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது.  மேலும் தனியார் ஆம்புலன்ஸ் கட்டணத்தை அரசின் 108 ஆம்புலன்சுக்கான கட்டணம் எனவும் கூறி விமர்சிக்கப்பட்டது.

இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், “நோயாளிகளிடம் தனியார் ஆம்புலன்ஸுகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் வந்தன.  எனவே தனியார் ஆம்புலன்ஸுகளுக்கான கட்டணம் மட்டும் நிர்ணயம் செய்யப்பட்டது.  அரசின் 108 ஆம்புலன்ஸ் கட்டணமின்றி இயங்கி வருகிறது.  இருப்பினும் 108 ஆம்புலன்ஸுக்கு கட்டணம் நிர்ணயித்ததாகச் செய்திகள் வருகின்றன.

இதைப் போல் ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது.  ஆனாலும் ஆவின் பால்விலையை லிட்டருக்கு ரூ3 உயர்த்தி விட்டு அதில் இருந்து ரூ.3 குறைக்கப்பட்டுள்ளதாகத் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன.  தயவு செய்து அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள்” எனக் கூறி உள்ளார்.