சென்னை:

பிஎச்டி எனப்புடும் ஆய்வு தொடர்பாக படிக்கும் மாணவிகளிடம், பேராசிரியர்கள் தவறாக நடப்பதாக எழுந்துள்ள புகார்களைத்தொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, கல்லூரி மாணவிகள் யாரும், பேராசிரியர்களின் வீடுகளுக்குச் செல்லத்தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் தொந்தரவு என்பதே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. படிப்பதற்காக பேராசிரியர்கள், விரிவுரை யாளர்கள், மாணவிகளை தங்களது வீடுகளுக்கு அழைக்கக்கூடாது. பேராசிரியர்கள் அழைத்தாலும் அவர்களது வீடுகளுக்கு மாணவிகள் யாரும் செல்லக்கூடாது. அதேபோன்று பேராசிரியர்களுடன் கல்லூரிச் சுற்றுலா செல்லவும் தடை விதிக்கப்படுகிறது.

அவ்வாறு ஆசிரியர்களின் வீடுகளுக்கோ அல்லது கல்விச் சுற்றுலாவோ செல்ல நேர்ந்தால், மாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்றுவிட்டுச் செல்ல வேண்டும். மேலும், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு இருந்தால் பேராசிரியர் ரீட்டா ஜான் தலைமை யிலான பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுவிடம் புகார் தெரிவிக்கலாம் அல்லது துணை வேந்தரிடமும் நேரடியாக வந்து முறையிடலாம்.

தங்களது புகாரை மாணவர்கள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கும் பட்சத்திலே நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், எந்த பிரச்னையாக இருந்தாலும் கல்லூரி நிர்வாகத்தையோ அல்லது நியமிக்கப்பட்ட குழுவையோ மாணவிகள் அணுகலாம்.

பேராசிரியர்கள் மீது புகார் வரும் பட்சத்தில் அது உடனடியாக விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு  கூறப்பட்டுள்ளது.