இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திரையுலகிற்கு வந்து, 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், உலகின் பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை, எஸ்.பி.பி., நடத்தி வருகிறார். அவரது மகன் சரண் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில், தன் இசையில் உருவான பாடல்களுக்கு காப்புரிமை பெற்றிருப்பதாகவும், தனது, அனுமதியின்றி அவற்றைப் பாடக்கூடாது என்றும் எஸ்.பி.பி.க்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து இனி இளையராஜா இசையமைப்பில் தான் பாடிய பாடல்களை மேடைகளில் பாடப்போவதில்லை என்று எஸ்.பி.பி. அறிவித்தார்.
இதுகுறித்து, சமூகவலைதளங்களில் ஆதரித்தும் எதிர்த்தும் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். பதிவிடுவோரில் பலர் கடுமையான விமர்சனங்களையும் வைத்தபடி இருக்கிறார்கள். சிலர் சாதியை மையமாக வைத்தும் விமர்சிக்கிறார்கள்.
இந்த நிலையில், எஸ்.பி.பி., “இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.