சென்னை: சாதாரண 2 நாள் மழைக்கே சென்னை உள்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், அதை கையாளத் தெரியாத ஆட்சியாளர்கள் சென்னையை சிங்கப்பூராக மாற்றுவோம், மலேசியாவாக மாற்றுவோம் என்று மக்களை ஏமாற்றாதீர்கள் என சமூக ஆர்வலரும், சூழலியல் ஆர்வலரும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவருமான சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
ஒரு சாதாரண மழைநீரைக்கூட ஆட்சியாளர்களால் கையாள முடியவில்லை என்றால் தமிழகத்தை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பேசுவதில் என்ன அர்த்தம் உள்ளது என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது மழை பெய்த நிலையில், தற்போது வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 4 நாட்களாக சென்னை உள்பட பல பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. சென்னையில் இன்று 4வது நாளாக அடைமழை பொழிந்து வருகிறது. இதனால், சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகள் அனைத்தும் நிரம்பி, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரது வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால், பொதுமக்கள் பலர் பாதுகாப்பிற்காக தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தங்கியுள்ளனர். மீட்புப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களின்போது, சென்னையில் இதுபோன்ற ஒரு சூழல் ஏற்படுவதும்,அதை தற்காலிகமாக சரி செய்வதுமே தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் சென்னையில் பேரழிவை ஏற்படுத்தியும், இதுவரை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் எந்தவித முன்னேற்பாடுகள் செய்யாமல் மக்களை ஏமாற்றி வந்துள்ளது, தற்போதைய மழை பாதிப்பில் அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து கடந்த ஆட்சியாளர்களும், இப்போதைய ஆட்சியாளர்களும் ஒருவர்மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கு காரணம் அரசியல்வாதிகளும், அவர்களுக்கு ஆமாஞ்சாமி போடும் அதிகாரிகளுமே காரணம் என்றும், ஏரிகளையும், கால்வாய்களையும் ஆக்கிரமித்துள்ளதுடன், பல இடங்களை பிளாட் போட்டு விற்பனை செய்து, வீடுகளாகவும் குடியிருப்புகளாகவும் தொழில்நுட்ப பூங்காக்களாகவும் மாற்றி விட்டனர் என்று ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மற்றொரு தரப்பினர், வந்தாரை வாழவைக்கும் ‘சென்னை’ வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வாழ்வாதாரம் தேடி வரும் மக்களே, பொறம்போக்கு இடங்களிலும், குளம் குட்டைகளையும் ஆக்கிரமித்து வருகிறார்கள் என்று கூறி வருகின்றனர். இருந்தாலும், ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கே சென்னை இந்த பேரழிவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதற்குகாரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது சென்னை வெள்ளக்காடாக மாறுவதற்கு யார் காரணம்? என்பது விவாதப்பொருளாகி மாறி உள்ளன.
இந்த நிலையில், சென்னையின் பேரழிவு குறித்து சூழலியல் ஆர்வலரும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவருமான சுந்தர்ராஜன் கூறியதாவது,
சென்னை இந்த அளவுக்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் அரசு கட்டமைப்பே என்று குற்றம் சுமத்தி உள்ளார். தமிழ்நாட்டில் நில அமைப்புக்கான அனுமதிகளை வழங்கும் நோடல் ஏஜென்சிகளாக டிடிசிபி (DTCP) மற்றும் சிஎம்டிஏ (CMDA) ஆகியவை உள்ளன. இவைகளில் பணியாற்றி வரும் அதிகாரிகள் ஒழுங்காக செயலாற்றி இருந்தாலே இதுபோன்ற நிலைமை உருவாக்கி இருக்காது.
இவர்களின் மெத்தனத்தாலும், லஞ்ச லாவண்யங்களாலும், ஏரி, குளங்கள் போன்ற தரிசு நிலங்கள் அரசியல்வாதிகளால் சுரண்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதற்கு டிடிசிவி அனுமதியும் வழங்கி விடுகிறார்கள். சிஎம்டிஏ, டிடிசிபி அனுமதி பெற்ற நிலங்கள் என விளம்பரங்கள் வரும்போது அதனை நம்பி மக்கள் இடத்தை வாங்கி வீடு கட்டுகிறார்கள். அந்த இடம் ஏரி, குளம் அமைந்த இடமா என்பது ஒரு சாமானியனுக்கு எப்படி தெரியும்? இந்த விஷயத்தில் நிலங்களை வாங்கும் பொதுமக்களை குறை சொல்ல முடியாது. இதற்கு காரணம், அரசு கட்டமைப்பில் உள்ள குறைகளே. இதற்காக நாம் இயற்கையை குறை சொல்லக்கூடாது.
ஒரு சாதாரண மழைநீரை கையாள முடியவில்லை என்றால் தமிழகத்தை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பேசுவதில் அர்த்தமில்லை. இது மக்களை ஏமாற்றும் செயல். இனி வரும் காலங்களிலும், இதுபோன்ற நிலை உருவாகாமல் இருக்க அரசு சில நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.
முதற்கட்டமாக சென்னை மாநகரின் எலிவேசன் (elevation) மேப்பை வடிவமைக்க வேண்டும். இந்த elevation மேப் இல்லாமல் நகரில் எங்கு மேடு உள்ளது, எங்கு பள்ளம் உள்ளது என்பது தெரியாது. அதற்கு தகுந்தார் போல் மேப்பை வடிவமைத்து Storm drains முறையை செயல்படுத்த வேண்டும்.
அதாவது, சென்னை போன்ற நகரங்களில் அதீத கனமழை பெய்யும்போது அதை சமாளிக்க Storm drains எனும் துளை முறையை மேம்பைக் கொண்டு வடிவமைக்க வேண்டும். இந்த Storm drains-ல் சேரும் நீர் அனைத்தும் நதியில் சென்று கலப்பதை தவிர்க்கலாம். அதற்காக ஆங்காங்கே சிறு சிறு நீர்த்தேங்களை கட்டி நீரை சேர்க்கலாம்.
இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து, நமது கட்டமைப்பை சரியான உருவாக்கினாலே, நமது மாநிலம் எந்த மாதிரியான மழையையும் எதிர்கொள்ளும் அளவுக்கு உயர்ந்துவிடும்.
மேலும், எங்கெங்கெல்லாம் இயற்கை நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதோ, அவற்றையெல்லாம் மீட்டெடுக்க வேண்டும்.
சென்னை பிரதான பகுதியாக தற்போது உருவாகி உள்ள வேளச்சேரி பள்ளிக்கரனையில் உள்ள 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ஏரி இன்று வெறும் 600 ஏக்கர் மட்டும்தான் உள்ளது. அவைகளை இப்போது மீட்டெடுக்க முடியுமா?
நீர்நிலையங்களையும், நீர்வழித்தடங்களையும், சதுப்பு நிலங்களையும் ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்ட அனுமதி அளித்த ஆட்சி யாளர்கள், அவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகளின் ஆணவம் மற்றும் அஜாக்கிரதையின் காரணமாகவே, இன்று சென்னையில் நீர் வடிய வழியில்லாமல் திண்டாடுகிறது. இதுபோன்ற ஊழல் வெள்ளப்பெருக்குக்கு உருவாக, இயற்கையை தடுத்த மனிதனின் தவறுதான் காரணம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.