குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை டிஸ்னிலேண்ட் போன்று பொழுதுபோக்குப் பூங்காவாக மாற்றி காந்தியை இன்னொரு முறை படுகொலை செய்யாதீர்கள் என்று காந்தியவாதிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.

டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்றத்தை கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் அகமதாபாத்தைச் சேர்ந்த பிமல் படேலின் ஹெச்சிபி டிசைன் பிளானிங் அண்ட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம், சபர்மதி ஆசிரமத்தை புதுப்பொலிவுடன் புதுப்பிப்பதற்கான எண்ணத்தை வெளியிட்டுள்ளது.

பிமல் படேலின் இந்த முயற்சி, சபர்மதி ஆசிரமத்தின் எளிமை மற்றும் புனிதத்தன்மையை சிதைத்து பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றிவிடும், இது காந்தியின் மீது நடத்தப்படும் இரண்டாவது படுகொலை நிகழ்வு என்று பிரகாஷ் ஷா, ஷபனம் ஹஷிமி, ராஜ்மோகன் காந்தி, ராமச்சந்திர குஹா, உள்ளிட்ட காந்தியவாதிகள் கூறியிருக்கின்றனர்.

ரூ. 1200 கோடி மதிப்பீட்டில் இந்த ஆசிரமத்தை மாற்றியமைக்க மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு அகமதாபாத் மட்டுமன்றி நாட்டின் பலபகுதிகளில் இருக்கும் காந்தியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு கடிதம் எழுதி இருக்கின்றனர்.

பிரகாஷ் ஷா தலைமையில் 100 க்கும் அதிகமானோர் இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

1915 ம் ஆண்டு சபர்மதி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட இந்த ஆசிரமத்தில் 1917 முதல் 1930 வரை மகாத்மா காந்தி மற்றும் கஸ்தூரிபாய் காந்தி வாழ்ந்து வந்தனர்.

நூற்றாண்டு பழமை மிக்க காந்தியடிகளின் இந்த ஆசிரமத்தில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு என்ன வேலை இருக்கிறது என்று பிரபல அரசியல் ஆய்வாளர் அச்சுத் யக்னிக் கேள்வியெழுப்பியுள்ளார்.

சபர்மதி ஆசிரமத்தை மறுசீரமைப்பதாக கூறிக்கொண்டு இதனை சீர்குலைக்கப் பார்ப்பதாக அகமதாபாத் உள்ளிட்ட குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் இந்த கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.