சென்னை:  திமுகவில் செயல்பட்டு வரும்  23 அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான  துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திமுகவை பொறுத்தவரை இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, மீனவர் அணி, தொண்டர் அணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, தகவல் தொழில்நுட்ப அணி, அயலக அணி, சுற்றுச்சூழல் அணி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, ஆதிதிராவிடர் நல உரிமை பிரிவு, அமைப்பு சாரா ஓட்டுநர் நல பிரிவு, சொத்து பாதுகாப்பு குழு, தணிக்கை குழு, என 23 சார்பு அணிகள் இருக்கின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கானோர் நிர்வாகிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கான கூட்டம்  டிசம்பர் 28ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இதையடுத்து, அணி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திமுகவில் நிர்வாக ரீதியாக இருக்கக்கூடிய 23 அணிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.

அதன்படி,  திமுக துணைப் பொதுச் செயலாளர்களான பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி கருணாநிதி ஆகியோர் நிர்வாக ரீதியான அணிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.