சென்னை: திமுக ஏழாவது முறையாக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்று கூறிய முதலமைச்சர், ‘இன்றைக்கு சில கட்சிகளை பார்க்கிறோம். துவங்கிய உடனே, ஆட்சிக்கு வருகிறோம், வருவோம் என்று சொல்லக் கூடிய நிலை, நாட்டில் இருந்து கொண்டு இருக்கிறது’ என எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார்.
- வேஷமிட்டு நாடகத்தை நடத்திக் பிழைத்து கொண்டிருக்கும் கட்சியின் பெயரை சொல்லி கழக மேடைக்குரிய கௌரவத்தை குறைக்க நான் விரும்பவில்லை.
- திராவிட முன்னேற்றக் கழகம் என்பது நேற்று முளைத்த காளான் அல்ல
- பவள விழா கண்ட இயக்கம் திமுக.. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தோன்றியது திமுக:
- . தொடர்ந்து திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டே இருப்போம்!
- திமுக ஏழாவது முறையாக நிச்சயம் ஆட்சி அமைக்கும்
- அரசியல் அனாதைகள் எல்லாம், நாங்கள் தான் அடுத்த முதலமைச்சர் என பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் இணைந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 3000-க்கும் மேற்பட்ட நா.த.க உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியின்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளையும், புதிதாக கட்சி தொடங்கி உள்ள தவெக கட்சி தலைவர் விஜயையும் கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசியவர், பிற கட்சி பொறுப்பில் பணியாற்றிய நீங்கள் தலைமை முறையாக இல்லை என்பதால் தி.மு.க.வில் இணைந்து உள்ளீர்கள். பிற கட்சியிலிருந்த நீங்கள் தலைமை சரியில்லை என்பதை உணர்ந்து வர வேண்டிய கட்சிக்கு வந்து சேர்ந்துள்ளீர்கள் என்று வரவேற்றார்.
தி.மு.க. நேற்று முளைத்த காளான் அல்ல. 1949-ல் அண்ணா வடசென்னையில் கொட்டும் மழையில் தொடங்கிய இயக்கம் என்று கூறியதுடன், 1949-ல் தி.மு.க. தொடங்கப்பட்ட நிலையில் 1957-ல் தான் தேர்தல் களத்தை சந்தித்த வளர்த்தெடுக்க இயக்கம் தி.மு.க. 1957-ல் 15 இடங்களில் தான் வெற்றி பெற்றோம். 1962-ல் 50-க்கும் மேற்பட்ட இடத்தில் வென்று எதிர்க்கட்சியானது தி.மு.க.
ஆட்சியில் அமர்வதற்கு அல்ல; ஏழை – எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தொண்டாற்ற தான் தி.மு.க. தொடங்கப்பட்டது என்று கூறியவர்,
நாம் தமிழர் கட்சி என்ற பெயரை சொல்லவே நாங்கள் தயாராக இல்லை. தமிழருக்காக பாடுபடும் கட்சி என்றால் அக்கட்சியின் பெயரை உச்சரிக்கலாம் என்று விமர்சித்தவர், தற்போது கட்சி ஆரம்பிப்பவர்கள் உடனேயே ஆட்சி அதிகாரத்தில் அமர்வதாக பிதற்றிக் கொண்டிருக் கிறார்கள் என்றவர்,
இப்போது அரசியல் அனாதை நிலையில் சுற்றிக்கொண்டிருப்பவர்கள் எல்லாம், நாங்கள் தான் அடுத்த முதலமைச்சர் என பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றார். வேஷம் கட்டிக்கொண்டு திரிபவர்களை அடையாளப்படுத்துவதற்கு நான் விரும்பவில்லை என்றார்.
திராவிட மாடல்’ என்று சொன்னால் கோபம் வருகிறது என்றால் பயந்துகொண்டு மூலையில் ஒடுங்கிக் கிடக்க மாட்டோம். தொடர்ந்து திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டே இருப்போம் என்றவர், தி.மு.க., என்பது நேற்று முளைத்த காளான் அல்ல. தி.மு.க., என்பது ஆட்சிக்கு வர வேண்டும், பதவியில் அமர வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, மக்களுக்காக பணியாற்ற வேண்டும். ஏழை எளியவர்களுக்கு தொண்டு ஆற்ற வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பாடுபட வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது.
பவள விழா கண்ட இயக்கம் திமுக என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், திமுக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தோன்றியது என்றார்.
ஆனால் இன்றைக்கு சில கட்சிகளை பார்க்கிறோம். துவங்கிய உடனே, ஆட்சிக்கு வருகிறோம், வருவோம் என்று சொல்லக் கூடிய நிலை, நாட்டில் இருந்து கொண்டு இருக்கிறது. . நான் யார், எந்த கட்சி தலைவர் என்று பெயர் சொல்ல விரும்பவில்லை. அதற்கு காரணம் நான் அவர்களுக்கு எல்லாம் அடையாளம் காட்ட தயாராக இல்லை. இது தான் உண்மை. அவர்களின் பெயரை சொல்லி இந்த மேடைக்கு உரிய அங்கீகாரத்தை குறைத்து கொள்ள விரும்பவில்லை. அந்த கட்சியோட பெயரை சொல்ல விரும்பவில்லை என்றார்.
மேலும், திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு ஆவேசம் வருகிறது. . தி.மு.க., என்று சொன்னாலே சிலருக்கு கோபம் வருகிறது. ஆவேசம் வரட்டும், கோபம் வரட்டும். மதத்தை மையமாக கவர்னர் பேசுவதை நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறேன். ஆனால் கவர்னரை மாற்ற வேண்டும் என்று சொல்ல மாட்டேன். அவர் இருப்பதால் தான் தி.மு.க., இன்னும் வளர்கிறது. தி.மு.க.வுக்கு ஆதரவும் அதிகரிக்கிறது. தமிழக ஆளுநரை தயவு செய்து மாற்றி விடாதீர்கள் என்று பிரதமர், உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

அடுத்த சட்டசபை கூட்டத்திற்கும் கவர்னர் வர வேண்டும். நாங்கள் கவர்னர் உரையை எடுத்து கொடுப்போம். அதனை அவர் படிக்காமல் செல்ல வேண்டும். மக்கள் அதனை பார்க்க வேண்டும்.
பிரதமர் மோடி, அமித்ஷா ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து கவர்னரை மாற்றவே வேண்டாம். அவரே கவர்னராக இருக்க வேண்டும் என்று கூறியதுடன், 7-வது முறையாக நிச்சயமாக தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என உறுதியாக சொல்கிறேன்.
.இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வோம். சாதனை படைப்போம் வரலாறு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பெறும். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்துவோம் என்று சொன்னதை முதல்வர் நிகழ்த்தி காட்டினார். தமிழகத்தின் அடையாளங்களை கவர்னர் அழிக்க முயற்சி செய்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, தமிழ் உணர்வும், தன்மானமும் கொண்ட கட்சி தி.மு.க., எங்கிருந்து வந்துள்ளீர்கள் என்பது முக்கியமில்லை. எங்கு வரவேண்டுமோ அங்கு வந்து விட்டீர்கள், என்றார்.