சென்னை:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும், இது தொடர்பாக மக்களவையில், அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்தை பார்த்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு முதுகெலும்பு இல்லாதவர் என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஜெயக்குமார், முதுகெலும்பு இருப்பதால்தான் அதிமுக நிமிர்ந்து நன்னடை போடுகிறது என்றும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு உள்ளதால்,  இனி தி.மு.க.வினர் காஷ்மீரில் சொத்துகளை வாங்கி குவிப்பார்கள் என்றும் நக்கலாக கூறினார்.‘

இன்று காலை கிரின்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ”காவிரியின் குறுக்கே அணை கட்டப்பட்டது, முல்லைப் பெரியாறு அணை தாரை வார்க்கப்பட்டது என அனைத்தும் முழுக்க  முழுக்க திமுகவின் ஆட்சியில்தான் நடைபெற்றது என்று கூறியவர், முதுகெலும்பு இல்லாத விஷயங்களைச் செய்தது திமுக. உள்ளே தூக்கி சிறையில் வைத்து விடுவார்கள் என்பதற்காக, கோழைத்தனமாக, பயந்துபோனவர்கள் திமுகவினர்.. அதனால்தான் தமிழ்நாட்டின் உரிமைகளைத் தாரை வார்த்தனர்.

நடந்த சம்பவங்களை வைத்துப் பாருங்கள், யாருக்கு முதுகெலும்பு இருக்கிறது, யாருக்கு இல்லை என்பது தெரியும். இந்த உரிமைகளை எல்லாம் மீட்டெடுக்கும் பணி, அதிமுக ஆட்சியில்தான் நடைபெற்று வருகிறது. அன்று உரிமைகளை விட்டுக்கொடுத்துவிட்டு இன்று, எங்களைப் பார்த்து முதுகெலும்பு இல்லை என்கிறார்கள். யாருக்கு முதுகெலும்பு இருக்கிறது என்று வரலாறு சொல்லும். முதுகெலும்பு இருப்பதால்தான் அதிமுக நிமிர்ந்த நன்னடை போடும் நிலைமை இருக்கிறது என்று திமுக மீது கடுமையாக சாடினார்.

தொடர்ந்து பேசியவர், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டம் 370 ரத்து செய்ய வேண்டும் என்பதே பெரும்பான்மையான மக்களின் கருத்து என்று கூறியவர்,  காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு உள்ளதால்,  இனி தி.மு.க.வினர் காஷ்மீரில் சொத்துகளை வாங்கி குவிப்பார்கள் என்றும் நக்கலாக கூறினார்.

திமுக கூட்டியிருக்கும் அனைத்துக்கட்சிக் கூட்டம் என்பது அரசியலுக்கான வெளி வேஷம் என்று விமர்சித்தவர்  வரலாறை திரும்பிப் பார்த்தால்  தெரியும் என்றும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதில் திமுக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.