சென்னை: கொங்கு மண்டலம் உள்ள உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில்  கடந்த 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலேபெரும்பாலாக திமுக கூட்டணி கட்சிகளே முன்னிலை வகிக்கின்றன. தற்போதைய நிலையில் 21 மாநகராட்சிகள் உள்பட பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றும் சூழலில் உள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு அதிமுகவின் கோட்டையாக திழ்ந்து வரும் கொங்கு மண்டலத்திலும் திமுக கால் பதித்துள்ளது.

கோவையில் உள்ள 7  நகராட்சிகளையும்  முழுவதுமாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், காரமடை , கருமத்தம்பட்டி, மதுக்கரை, கூடலூர் ஆகிய நகராட்சிகளை  திமுக கைப்பற்றி உள்ளது.

மேலும், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சியை 40 ஆண்டுகளுக்குப் பிறகு  திமுக கைப்பற்றி உள்ளது . இதில் உள்ள 30 வார்டுகளில் திமுக கூட்டணி 16, அதிமுக 13, சுயேச்சை ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் திமுக 22 ,அதிமுக 9 மற்றும் காங்கிரஸ் இரண்டு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, திருமுருகன்பூண்டி நகராட்சியில் மொத்தம் உள்ள 27 இடங்களில் திமுக கூட்டணி 17 இடங்களிலும், அதிமுக 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதன்படி,  காங்கேயம், பல்லடம், தாராபுரம் , வெள்ளகோயில் , உடுமலைப்பேட்டை 6 நகராட்சிகளையும்  திமுக கைப்பற்றியுள்ளது.

பல்லடம் நகராட்சியில் மொத்தம் உள்ள  18 இடங்களில் திமுக 14 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும், அதிமுக, சுயேட்சைகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

வெள்ளக்கோவில் நகராட்சியில் மொத்தம் உள்ள 21 இடங்களில், 15-ல் திமுக கூட்டணியும்,  6 இடங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. 

உடுமலைப்பேட்டை நகராட்சியில் மொத்தம் உள்ள 33 இடங்களில் 21-ல் திமுகவும், 4 இடங்களில் சுயேட்சைகளும்,  3 இடங்களில் அதிமுகவும் வென்றுள்ளது. 5 வார்டுகளில் இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை.

காங்கேயம் நகராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில்,  திமுக கூட்டணி 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 இடங்களிலும்,  சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தாராபுரம் நகராட்சியில்  மொத்தம் உள்ள 30 வார்டுகளில் திமுக கூட்டணி 23 இடங்களில் வென்று நகராட்சியை கைப்பற்றி உள்ளது. அதிமுக 3 இடங்களிலும்,  பாஜக மற்றும் சுயேட்டை தலா ஒரு இடத்திலும் வென்றுள்ளனர். 2 இடங்களுக்கு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையொட்டி அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் ஆ.ராசா, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் ஆகியோர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை  சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.