சென்னை: தமிழ்நாட்டில்,  அனைத்து வீடுகளுக்குமான 100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் பொய்யானது,  ஒரு வீட்டு உரிமையாளருக்கு 1க்கும் மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால்  ஒன்றுக்கு மட்டுமே மானியம் என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மற்ற இணைப்புகளுக்கு இலவச 100 யூனிட் மின்சாரம் ரத்து என்று தமிழ்நாடு  மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

ஏற்கனவே சொத்து வரி, மின் கட்டணம், தொழில்வரி, குடிநீர் வரி, பத்திரப்பதிவு கட்டணம் என அனைத்து வகையான வரிகளையும் உயர்த்திய தமிழ்நாடு அரசு தற்போது 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கும் வேட்டு வைத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே குடியிருப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் ஒரே பெயரில் இருப்பவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருவதாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவரை ஒன்றாக்கி ஒரே இணைப்பாக வழங்கப்போவதாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகள் வைத்துள்ளவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் சலுகை ரத்து செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இது மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்றும், அதில் உண்மையில்லை என மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஒரு வீட்டு உரிமையாளருக்கு 1க்கும் மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால் 100 யூனிட் மட்டும் மானியம் என்றும், வீட்டின் உரிமையாளருக்கு மற்றொரு இணைப்பிற்கு மானியம் ரத்து என்று தெரிவித்து உள்ளது.  ஆனால் அதே நேரத்தில் வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்தால் 100 யூனிட் மானியம் தொடரும் என்றும், அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியம் ரத்து என்பது தவறானது என்றும் மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களாக மின்வாரிய தலைமையில் இருந்து ஒரே முகவரியில் ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை கள ஆய்வு செய்து கணினி வாயிலாக ஒன்றாக  செய்திட வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக மின்கணக்கீட்டு பொறியாளர்கள் கணக்கெடுத்து வருவதாகவும் கூறப்பட்டது.

இலவசங்களை வாரி இறைக்கும் தமிழ்நாடு அரசு, கடுமையான நிதி சிக்கலில் சிக்கி உள்ள நிலையில்,  மின்வாரியத்துக்கு  மேலும் வருவாயை ஈட்டும் வகையில், அப்பாவி மக்களின் தலையில் கைவைக்க முன்வந்துள்ளது.   பொதுமக்களிடம் எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் மின்வாரிய ஊழியர்களிடம் அரசாணையோ அல்லது வாரிய உத்தரவையோ வழங்காமல் ஒரே முகவரியில் ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளை கால ஆய்வு செய்து ஒன்றிணைக்கும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழிகாட்டுதலின் படி தானே மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. அப்படி இருக்கும்போது தற்போது ஏன் இந்த நடவடிக்கை என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திமுக அரசின் இந்த நடவடிக்கையால், சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் மின் கட்டணம் கடுமையாக உயரும் வாய்ப்பு உள்ளது. அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கு திருட்டுத்தனமாக மின்இணைப்பு எடுக்கப்பட்டு பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கா அரசும், மின் வாரியமும், மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றுவது எந்தவிதத்தில் நியாயம் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.  மின்வாரியத்தின் இது போன்ற நடவடிக்கைகளால் திமுக அரசுமீது மக்களின் அதிருப்தியை மேலும் அதிகரிக்கும் என  கூறப்படுகிறது.