சென்னை

திமுக தான் பெண்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தது என திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன்பேசி உள்ளார்.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியின் 131 ஆம் ஆண்டு விழா மற்றும் நிறுவனர் விழா ஆகியவை நேற்று நடந்தது.  இந்த விழாவில் மத்திய சென்னை திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தயாநிதி மாறன், “கடந்த 1948 ஆம் ஆண்டு இந்த கல்லூரியின் நிறுவனர் எத்திராஜுக்கு கல்லூரி தொடங்க வேண்டும் என்று ஒரு ஆசை வந்தது. அவர் பெண்களுக்கான கல்லூரியை ஏன் தொடங்கினார் என்றால் அது பெண்களின் முன்னேற்றத்துக்காகத்தான்,

பெண்கள் முன்னேற்றத்துக்காக முதன் முதலில் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார், பிறகு அதை  அண்ணாவும், கலைஞரும் தொடர  இன்று முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்.  சிலர் பெரியார் என்ன செய்தார் என்று கேட்பார்கள். அவர் பெண்களின் முன்னேற்றத்துக்குக் குரல் கொடுத்தவர்.

பெண்களுக்கு மரியாதை என்பது இல்லாத அந்த காலத்தில் அடுப்படியில் உள்ள பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று கேட்டு சிறுவயதிலேயே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்வார்கள். வாழ்க்கைத் துணை இறந்துவிட்டால் அந்த பெண் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே விதவையாக வீட்டில் வைக்கப்படுவாள்.

இதைப் பார்த்த பெரியார் அந்த வகை பெண்களுக்கு மறுமணம் செய்ய வேண்டும் குரல் கொடுத்தார். அவரின் முதல் குரலாக அது இருந்தது.  பிறகு அதை அண்ணாவும், கலைஞரும் தொடர்ந்தார்கள். பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை என்று இந்தியாவில் முதன் முதலில் சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர்தான். அதன் பிறகுதான் மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்தது.

ஆக இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாக இருந்தது திமுகதான். முதலில் பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம் கொண்டு வரப்பட்டது.  அப்போது பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும் என்று வைத்திருந்தார்கள்.பிறகு  அதை மாற்றி பிளஸ் 2 படித்திருக்க வேண்டும் என்று கலைஞர்  மாற்றினார்

அப்போது எதிர் கட்சியினர் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, இந்த உதவியைப் பெறுவதற்காகவாவது பெண்களை பிளஸ் 2 வரை படிக்க வைப்பார்கள் என்று கலைஞர் தெரிவித்தார்.

நாம் இன்று பெண்ணுரிமையை பற்றிப் பேசுகிறோம். ஆனால் உண்மையில் திமுக கட்சி இல்லை என்றால் பெண்களுக்கு இது போன்ற உரிமைகள் வந்திருக்கவே முடியாது. ” எனத் தெரிவித்துள்ளார்.