சென்னை:

குட்கா ஊழல் விவகாரத்தில் டிஜிபி ராஜேந்திரன் பெயரும் உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் பதவி விலக கோரி திமுகவினர் இன்று காலை திடீரென டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர்.

அவர்களை மயிலாப்பூர் சிட்டிசென்டர் அருகே போலீசார் மடக்கி கைது செய்தனர்.

குட்கா, பான்மசாலா போன்ற பொருட்கள் விற்பனையை  தமிழக அரசு தடை செய்துள்ளநிலையில், தடையை மீறி திருட்டுத்தனமாக விற்க உதவி செய்ததாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் உள்பட உயர்அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக திமுக எம்எல்ஏ அன்பழகன் தொடர்ந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் பதவி விலக வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், டிஜிபியை பதவி விலக வலியுறுத்தி திமுகவினர் இன்று டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக  சென்னை கடற்கரையில் உள்ள டிஜிபி அலுவலகத்தை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அனைத்து வாயில்களும் மூடப்பட்டன.

இதற்கிடையில் இன்று காலை திடீரென மயிலாப்பூரில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர்.

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட திமுகவினர் பேரணியாக டிஜிபி அலுவலகம் நோக்கி சென்றனர். பேரணியின் போது டிஜிபி பதவி விலக வேண்டும் திமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பேரணி மயிலாப்பூர் சிட்டி சென்டர் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதைத்தொடர்ந்து பேரணியில் வந்தவர்களை  போலீசார்  கைது செய்தனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. சுமார் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.