சென்னை
மாநிலங்களவை உறுப்பினரும் திமுக அமைப்புச் செயலாளருமான ஆர் எஸ் பாரதி இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ஆர் எஸ் பாரதி திமுகவின் அமைப்புச் செயலாளர் பதவியையும் வகித்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி அன்று நடந்த கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்துக் கொண்டு பேசினார். அவர் நீதிபதிகள் நியமனம் குறித்தும் தலித் மக்கள் குறித்தும் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
விழாவில் அவர் தனது உரையில் தற்போது தலித் மக்களும் நீதிபதியாக முடியும் எனவும் இது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை எனவும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி கடும் சர்ச்சை எழுந்தது. அவர் மீது ஆதி தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஆர் எஸ் பாரதி மீது தேனாம்பேட்டை காவல்துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்தனர். இன்று காலை ஆலந்தூரில் உள்ள ஆர் எஸ் பாரதியின் வீட்டுக்குச் சென்று அவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
[youtube https://www.youtube.com/watch?v=uSV9z_0WA1E]