டில்லி:

மிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா, மத்தியஅரசால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திமுக கேள்வி எழுப்பியது. இதற்கு மத்தியஅரசு தரப்பில் இருந்து சரியான பதில் தெரிவிக்காத நிலையில், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு, கடந்த 2017ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை 2 மசோதாக்களை நிறைவேற்றி, மத்தியஅரசுக்கு அனுப்பியது. இந்த மசோதாக்களை நிராகரித்து விட்டதாக மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது  தெரிவித்துள்ளது.

மத்தியஅரசின் இந்த நடவடிக்கை தமிழக அரசியல் கட்சிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக சட்டமன்றத்தில் இன்று திமுக சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மக்களவையிலும், இந்த விவகாரம் வெடித்தது.  திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு,  நீட் தேர்வு மசோதா மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டது கூட்டாட்சிக்கு எதிரானது என்று கடுமையாக சாடினார். நீட் விலக்கு தொடர்பான மசோதாக்களை மத்திய அரசு 27 மாதங்களாக கிடப்பில் போட்டது ஏன்? என்றும் அவர் வினவினார்.

இதற்கு மத்திய அரசு சரியான விளக்கம் அளிக்காததால் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.  இதைதொடர்ந்து மக்களவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதே பிரச்சனையை முன்வைத்து மாநிலங்களவையில் இருந்தும்  தி.மு.க. எம்.பி.க்கள் வெளி நடப்பு செய்தனர்.

நீட் விலக்கு கோரிய தமிழக அரசின் சட்டத்தை மத்திய அரசு, குடியரசுத் தலைவர் நிராகரித்து இருப்பது அரசியல் சட்டவிரோதமானது   மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி. நவநீத கிருஷ்ணன்,  ஊரகப் பகுதி மாணவர்களை பாதிக்கக்கூடிய நீட் தேர்வை திணிக்க வேண்டாம்  என்று வேண்டுகோள் விடுத்தார்.

நீட் தேர்வு விவகாரம் இன்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.