டில்லி,

லைநகர் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை திமுகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

ஏற்கனவே முதல்கட்டமாக 41 நாட்கள் போராட்டம் நடத்திய நிலையில், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதியின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.  தற்போது இரண்டாவது கட்டமாக 17 வது நாளாக டில்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்து வருகிறது.

தமிழக விவசாயிகள் போராட்டம் குறித்து மத்திய அரசும், மாநில அரசும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனதே தவிர எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 18வது நாளை எட்டியுள்ளது.

ஏற்கனவே பல வகையான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், நேற்று உடலில் அடிமைச் சங்கிலியை அணிந்து ஜந்தர் மந்தர் சாலையில் ஊர்வலமாகச் சென்றனர்.

டில்லியில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் தங்களை அடிமைகள் போல் நடத்து கிறார்கள். அதனால் அடிமைச் சங்கிலி போட்டுப் போராட்டம் நடத்தியதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

இந்நிலையில், இன்றைய விவசாயிகள் போராட்டத்தில்,  திமுக எம்பி கனிமொழி சந்தித்துப் பேசினார். அப்போது,  விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் மேலும் அழுத்தம் கொடுப்பதாக விவசாயிகளிடம் தெரிவித்தார்.