கோயில் சிலைகள் திருட்டு : இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் கைது

சென்னை

தஞ்சை மாவட்டத்தில் இருந்த கோயில்களில் இருந்து சிலைகளை திருடியதாக அறநிலையத்துறை அதிகாரிகள் 7 பேர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம் உட்பட இரு ஆலயங்களில் இருந்து ஆறு பஞ்சலோக சிலைகள் திருடப்பட்டன.  இந்த சிலைகள் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பான சிலைகள்.  அவைகளின் புராதனத்தினால் விலையை யாராலும் மதிப்பிட முடியாது.  இது குறித்து மாநில சிஐடி துறையின் சிலைதிருட்டு பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தால் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.  அவர் தன் குழுவினருடன் நடத்திய விசாரணையில் சிலைகளை கடத்தியது ஒரு பெரிய கடத்தல் கூட்டம் என்பது தெரிய வந்தது.  தற்போது அந்தக் கூட்டத்தில் அறநிலையத்துறை அதிகாரிகளும் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த சிலை திருட்டில் பெரும் உதவிகளை கடத்தல்காரர்களுக்கு செய்துள்ளதை கண்டுபிடித்த சிஐடி துறை தற்போது 7 அறநிலையதுறை அதிகாரிகள் உட்பட 11 பேர் மேல் வழக்கு பதிந்துள்ளனர்.  அனைவரும் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.

 
English Summary
CID idol division booked a case of idol theft on 11 persons including 7 hindu endowment officers