டில்லி
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும், மசோதா மீது ஆளுநர் முடிவு எடுக்கத் தாமதம் செய்வது குறித்து மாநிலங்களவையில் தி மு க எம்பி குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை சமீபத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய மசோதா ஒன்றை நிறைவேற்றியது. இந்த மசோதா தமிழக ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் இது குறித்து எவ்வித முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இது குறித்து அரசு நினைவூட்டி உள்ளது.
ஆயினும் ஆளுநர் இதுவரை நீட் தேர்வு மசோதா குறித்து எவ்வித முடிவும் எடுக்காமல் உள்ளார்; இது தமிழக மக்களிடையே கடும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இது குறித்து ஆளும் திமுக அரசு தொடர்ந்து தமிழக ஆளுநர் மீது குறை கூறி வந்த போதிலும் ஆளுநர் தரப்பில் இருந்து விளக்கம் வரவில்லை.
இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் இது குறித்து உரையாற்றினார். அவர், “ஒரு மாநில சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதா மீது அம்மாநில ஆளுநர் குறிப்பிட்ட கால் வரம்புக்குள் தாமதம் செய்யாமல் முடிவு எடுக்க வேண்டும். தமிழக சட்டப்பேரவை அனுப்பி உள்ள நீட் தேர்வு மசோதா மீது ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் உள்ளார்” எனக் குற்றம் சாட்டி உள்ளார்.