சென்னை :
சென்னையில் ஓஎம்ஆர் எனப்படும் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள 5 சுங்கச்சாவடிகளையும் உடனே அகற்ற வேண்டும் என்று, மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தி.மு.க எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மனு அளித்துள்ளார்.
சென்னையின் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் முக்கியமான ராஜீவ்காந்தி சாலை. சென்னை அடையாறு முதல் சோழிங்கநல்லூர், சிறுசேரி வரை நூற்றுக்கணக்கான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள இந்த சாலையில் தினசரி லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு சுங்கச்சாவடியும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி பொதுமக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தென்சென்னை திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய அமைச்சரிடம் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி மனு அளித்துள்ளார். இத்துடன், பொதுமக்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வந்த கிருஷ்ணா கேட் வாசலையும் உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.