சென்னை: திமுக எம்.பி. ஆ.ராசா தீமதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையின்போது, நாடாளுமன்றம் நடைபெறுவதை ராசா தரப்பு காரணம் காட்டியதால் வழக்கை சிறப்பு நீதிமன்றம் வரும் 22ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
திமுக துணை பொதுச்செயலாளரும், தற்போது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆ.ராசாவுக்கு சொந்தமான இடங்களில் சென்னை, திருச்சி, கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.
சுமார் 7 வருட விசாரணைக்கு பிறகு எம்.பி. ஆ.ராசா மற்றும் அவரது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எதிராக கடந்த மாதம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருமானத்தை விட 579% அதிகமாக, 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆ.ராசா உள்ளிட்ட ஐந்து பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக எம்.பி.ஆ.ராசா தவிர மற்றவர்கள் நேரில் ஆஜராகி இருந்தனர். நாடாளுமன்ற கூட்டதொடர் நடைபெற்று வருவதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆ.ராசா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஆஜராவில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்ற நீதிபதி, நாடாளுமன்றம் நடைபெறுவதால், வழக்கை 22ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், அன்று ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.