சென்னை:  சென்னையில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளா வதுடன் பல இடங்களில் காயச்சல் போன்றவை தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்க வேண்டிய மாநகராட்சி, அதை தடுக்க முறையான நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

சென்னையின் தெரு வீதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் கொசுவை ஒழிக்க புகை மருந்து அடித்து வருகின்றனர். இந்த மருந்தால் எந்தவொரு கொசுவும் குறைவது இல்லை. மாறாக அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. கொசு மருந்து அடிக்கிறார்களா அல்லது வெறும் தண்ணியை ஊற்றி அடிக்கிறார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக மாநகராட்சிக்கு பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கடந்த (2022) ஆண்டின் மாநகராட்சி பட்ஜெட்டில், கொசுவை ஒழிக்கவும், டிரோன்கள் முலம் மருந்து தெளிக்கவும், டிரோன்கள் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்த ரூ.4.62 கோடி கொசு ஒழிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த 2022-2023-ம் நிதியாண்டில் 30 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் எந்திரங்கள், 100 எண்ணிக்கையிலான கையினால் எடுத்துச் செல்லும் புகைப் பரப்பும் எந்திரங்கள் மற்றும் 200 எண்ணிக்கையிலான கொசு மருந்து தெளிக்கும் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும். மேலும் சென்ற ஆண்டினை போலவே ஆளில்லா வானூர்தி மூலம் கொசுப்புழுக் கொல்லி மருந்து தெளிக்கும் பணி மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.4.62 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி பகுதியில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நீர்வழித் தடங்கள் உள்ளன. இவற்றிலும், பெரும்பாலான மழைநீர் வடிகால்களில் 365 நாட்களும் கழிவுநீர் ஓடுவதால் கொசு உற்பத்தி ஆதாரங்களாக மாறியுள்ளன. இங்கெல்லாம் டிரோன்களை கொண்டு கொசு ஒழிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், கொசு ஒழிக்கப்பட்டதா என்றால், கொஞ்சம் கூட இல்லை என்பதுதான் உண்மையான நிலவரம். அவ்வப்போது டிரோன்கள் கொண்டு கொசு மருந்து தெளிப்பதாக புகைப்படங்கள் வெளியாகிறதே தவிர கொசுக்கள் எங்கும் ஒழிக்கப்படவில்லை என்பதே உண்மை நிலவரமாக உள்ளது.

ஆனால், மாநகராட்சியோ, மாநகராட்சி சார்பில் முதிர் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் பணியில் 3,312 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும், வாரந்தோறும் வீடுவீடாகச் சென்று ஆய்வு செய்வதாகவும், 216 இயந்திரங்களைக் கொண்டு புகை பரப்பி முதிர் கொசுக்களை அழிப்பதாகவும், நீர் வழித்தடங்களில் 844 கை மற்றும் விசைத் தெளிப்பான்களைப் பயன்படுத்தி கொசுக்கொல்லி தெளிப்பதாகவும் தெரிவித்தது.

இதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஜனவரியில், சென்னையில் கொசு மற்றும் புழுக்களை ஒழிக்க ரூ.798 லட்சம் மதிப்பில் 6 ட்ரோன்கள் 200 மருந்து தெளிப்பான்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் மாநகராட்சி அறிவித்திருந்தது.

ஆனால், உண்மை நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது. இந்த உபகரணங்கள் மூலம் கொசுக்கள் ஒழிக்கப்பட்டு வருகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. விதிகளை முறையாகப் பின்பற்றாமல் மாநகராட்சி அலட்சியம் காட்டுவதால் சென்னையில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், கொசுக்கடியால் அவதிக்குள்ளாவதாகவும் பொதுமக்கள், மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தெருக்களில் கொசு மருந்து அடிப்பதாக வரும் ஊழியர்கள்,  ஒரு தெருவில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டு, கொசு மருந்து  அடிக்கும் வண்டியை எடுத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள், அந்த வண்டியில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் எந்தவொரு கொசுவும் பாதிக்கப்படவும், சாகவும் இல்லை என்பதே உண்மை. இதுபோன்ற கொசு மருந்து தெளிப்பான்களில்  கொசு மருந்துதான் ஊற்றி அடிக்கிறார்களா அல்லது வெறும் தண்ணி அல்லது மண்ணெண்ய் ஊற்றி, கொசுவை ஒழிப்பதுபோல படம் காட்டுகிறார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி  வருகின்றனர்.

அதுபோல சென்னையின் முக்கியமான  பல இடங்களில் குப்பை கூளங்கள் மீண்டும் சேர்ந்து வருகின்றன. இதை அகற்றுவதிலும் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். மேலும் காலியான நிலங்களை கண்டறிந்து, அதில் கொசு உற்பத்தி ஆவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை, சாலையோர டிபன் கடை போன்ற இரவு நேர உணவு கடைகள், இரவு கடைகளை மூடிவிட்டு செல்லும்போது, சாலையில் கழிவுநீர்களை கொட்டிச் செல்வதால்,பல இடங்களில் அதன்மூலம் கொசு பரவுகிறது. இதை கண்காணிக்க வேண்டியவர்களும் முறையாக கண்காணிப்பதில்லை என்று குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள், மாநகராட்சி கூறுவது ஒன்று, ஆனால் நடப்போதோ வேறு. மொத்தத்தில் பொதுமக்கள் பணத்தை ஏப்பம் விடுகிறார்கள், மக்கள் நலனில் அக்கறை காட்டுவது இல்லை என்று குற்றம் சாட்டுகினற்னர்.

கொசு உற்பத்தியை தடுக்க, வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தப்படும் என கூறும், மாநகராட்சி அது முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிப்பது இல்லை, முறையாக கொசு உற்பத்தி ஆதாரங்களை கண்டுபிடிப்பதே இல்லை. கடைசி வாய்ப்பாக மேற்கொள்ள வேண்டிய புகைபரப்பி முதிர் கொசுக்களை அழிக்கும் பணியே பிரதான பணியாக மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அதில் உபயோகப்படுத்தப்படும் மருந்துகள் சக்தி குறைந்ததாக இருப்பதால், கொசு பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மாநகராட்சியை வழிநடத்தும் அனுபவம் வாய்ந்தவர்கள், மாநில பொது சுகாதாரத்துறையில் இல்லை. கொசுக்களைக் கட்டுப்படுத்த உடனடியாக தீவிர கொசுப்புழு தடுப்பு நடவடிக்கை, உயிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது, மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். மாநகராட்சியின் சமீப கால மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் அலட்சியமாகவே உள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கொசு தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டுக்களும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கூறிய,  மாநகராட்சி கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், ‘‘இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

சென்னை மாநகராட்சி மக்களிடம் சொத்து வரி, வணிகவரி உள்பட பல்வேறு வரிகளை வசூலிப்பதில் காட்டும் ஆர்வம், மக்களின் நலனின் காட்டவில்லை என்பதே உண்மை நிலவரம். இனிமேலாவது  விழித்துக்கொள்ளுமா மாநகராட்சி?