சென்னை: துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் திருப்போரூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இதயவர்மனை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மன். அவரது தந்தை முன்னாள் ஒன்றிய குழு தலைவர் லட்சுமிபதி. செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்எல்ஏ இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
செங்காடு கிராமத்தில் சங்கோதி அம்மன் கோவில் நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம் குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த நிலத்துக்கு செல்ல அருகில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாக தெரிகிறது. இதற்கு எம்எல்ஏ தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த நிலத்தை பார்வையிட இமயம்குமார், சென்னை ரவுடிகளுடன் சங்கோதி அம்மன் கோவில் அருகே சென்றார். அப்போது அங்கு இருந்த எம்எல்ஏ தந்தை லட்சுமிபதிக்கும், இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது இமயம் குமாருடன் வந்த ரவுடி கும்பல் லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். பதிலுக்கு லட்சுமிபதி, பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம் குமாரின் காரை நோக்கி சுட்டார்.
இந்த சம்பவத்தில் அவ்வழியே சென்ற தையூரை சேர்ந்த கீரை வியாபாரி சீனிவாசன் மீது குண்டு பாய்ந்தது. படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அரிவாளால் வெட்டப்பட்டதால் படுகாயம் அடைந்த லட்சுமிபதி, குருநாதன் ஆகியோர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
படுகாயம் அடைந்த இமயம் குமார் தரப்பினரும் சிகிச்சைக்காக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து திமுக எம்எல்ஏ இதயவர்மன் மீது வழக்குப்பதிவு செய்ய அவர் தலைமறைவானார்.
அவரை இரு மாவட்ட காவல்துறையினரும் தீவிரமாக தேடி வந்தனர். இந் நிலையில் இதயவர்மன் சென்னை அருகே மேடவாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel