சென்னை:

மிழக உள்ளாட்சித் துறை  அமைச்சரை சட்டமன்றத்தில் ஒருமையில் பேசியதாலும், கவர்னர் உரையை சட்டமன்றத்தில் கிழித்து எறிந்ததாலும், திமுக எ எம்.எல்.ஏ. அன்பழகனை,  இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தின் 2வது நாளாக கூட்டம் இன்று காலை தொடங்கியதும், மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து,கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது.

இந்த விவாதங்களின்போது,  திமுக, அதிமுக இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டது. அப்போது திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம் சாட்டி பேசினார்.

அதற்கு பதில் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  சட்டம் ஒழுங்கில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது, இதை மத்தியஅரசே உறுதி செய்துள்ளது என்றும்,  சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம் சாட்டும் திமுக உறுப்பினர், அதற்கான ஆதாரத்தை கூற முடியுமா என கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து விவாதம் நீடித்து வந்தது. அப்போது உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும், ஜெ.அன்பழகனுக்கும் இடையே காரசாரமாக வாதங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், அமைச்சரைப் பார்த்து ஜெ.அன்பழகன், ஒருமையில் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

அதிமுக, திமுக உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக குற்றம்சாட்டி அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஜெ.அன்பழகனை உடனே சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீர்மானம் கொண்டு வந்தார்.

இதன்மீது பேசிய சபாநாயகர்  அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உறுப்பினர் ஜெ.அன்பழகன் ‘உட்கார்’ என சொல்வதும் ஒருமையில் பேசுவதும் தவறு என சபாநாயகர் கண்டித்தார்.

இது தொடர்பாக பேசிய  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘அமைச்சரைப் பார்த்து எங்கள் உறுப்பினர் அன்பழகன் பேசியது தவறுதான், ஆனால், அதே வார்த்தையை உள்ளாட்சித்துறை அமைச்சரும் பேசியிருக்கிறார். இதற்கு சபாநாயகர் என்ன பதில் அளிப்பார்? ’ என கேள்வி எழுப்பினார்.

இதற்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் பதில் அளித்தார்.  அப்போது, ஜெ.அன்பழகன் செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் வருத்தம் தெரிவித்ததால் மறப்போம், மன்னிப்போம்’ என்றார்.

தொடர்ந்து பேசிய சபாநாயகர், ‘உறுப்பினர் அன்பழகனுக்கு இது கடைசி வாய்ப்பு. அவையில் இனி இப்படி நடந்துகொண்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார். இதையடுத்து தனது பேச்சுக்கு அன்பழகன் வருத்தம் தெரிவித்தார்.

ஜெ.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் திமுக உறுப்பினர்கள் சமாதானம் அடைந்தனர். தொடர்ந்து விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், ஆளுநர்‌ உரையை ஜெ.அன்பழகனை கிழித்ததால்‌  மீண்டும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, திமுக எம்எல்ஏ அன்பழகனை கூட்டத் தொடரில் இருந்து நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து ‘ இந்த கூட்ட தொடர் முழுவதும் ஜெ அன்பழகன் பேரவைலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக  சபாநாயகர் தனபால் அறிவித்தார். அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையான நடவடிக்கையில் ஈடுபட்டதால் இந்த தொடர் முழுவதும் அவர் சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்து உள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய எதிர்கட்சி துணைத்தலைவர் துரை முருகன், இது  திட்டமிட்ட செயல் என  குற்றம் சாட்டினார்.