கொரோனாவை எப்படிக் கையாளக்கூடாது என்பதற்கான முதல் பரிசு தமிழகத்துக்கு தான் கிடைக்கும்: மு.க. ஸ்டாலின் அறிக்கை

Must read

சென்னை: கொரோனா நோய்த்தொற்றை எப்படிக் கையாளக்கூடாது என்பதற்கான முதல் பரிசு தமிழகத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி அரசுக்கே கிடைக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக  தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது: ஊரடங்கை மீண்டும் 30.9.2020 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் திரு. பழனிசாமி, நேற்றைய தினம் (30.8.2020) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொய்களையும்’ ‘புரட்டுகளையும்’ பட்டியலிட்டு – மார்ச் மாதத்திலிருந்து சுமார் 6 மாத காலமாகத் தமிழக மக்கள் படும் வேதனைகளையும், சோதனைகளையும் மிகவும் குறைத்து மதிப்பிட்டு, எள்ளி நகையாடியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. அறிக்கையில் பல பொய்களைப் பட்டியலிட முடியும்.“நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காத்து, உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது” என்பது முதல் பொய்.

இதுவரை திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் வலியுறுத்திய 5000 ரூபாய் நேரடிப் பண உதவியைக் கூட அளிக்காததால்; அமைப்புசாரா தொழிலாளர்கள் ஏராளமான இன்னல்களுக்கு உள்ளாகி, நீதிமன்றமே அரசைக் கண்டிக்கும் பரிதாபமான நிலை ஏற்பட்டதை முதலமைச்சர் வசதியாக மறைத்து விட்டார்.“பொருளாதார பாதிப்பிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள்” என்பது இரண்டாவது பொய்.

இன்று தமிழகத்தின் பொருளாதாரம் படுபாதாளத்திற்குப் போய் விட்டது. 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையைப் பெற முடியவில்லை; கொரோனா பேரிடருக்காகக் கேட்ட எந்த நிதியுதவியையும் மத்திய அரசிடமிருந்து பெற இயலவில்லை; கண்துடைப்பு நாடகமாகக் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி முதலீடுகள் வரவில்லை; நிதி நிலைமையில் மூச்சுத் திணறி, தமிழக நிதி நிர்வாகம் இன்றைக்குத் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறைத்து இப்படியொரு அபாண்டப் பொய்யை அள்ளி வீசியிருக்கிறார்.

வேலைவாய்ப்பின்மை இரண்டே மாதங்களில் ஆறில் ஒரு பங்காகக் குறைந்திருக்கிறது” என்று மூன்றாவது பொய் சொல்லியிருக்கும் முதலமைச்சர், இப்போதுதான் 100 சதவீத தொழிலாளர்களுடன் தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படை உண்மையைக் கூட மறந்து விட்டார். சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என்று அத்தனை பேரும் வேலை இழந்து தவித்து, ஒட்டுமொத்த சென்னை மாநகரத்தின் பெரும் பகுதியே மாவட்டங்களுக்குக் குடி பெயர்ந்து சென்றதை மறைக்க இந்த மூன்றாவது பொய் மட்டுமல்ல; நான்காவதாக, “தனிநபர் வருவாய் படிப்படியாக உயர்ந்து வருகிறது” என்று கொஞ்சம் கூட நாகரீகமின்றி பொய் சொல்லி; ஒவ்வொரு வீட்டிலும் வேலை இழந்து – ஒவ்வொரு வீட்டிலும் வருமானம் இழந்து தவிப்போரை எள்ளி நகையாடியிருக்கிறார்.

கொரோனா பேரிடர் ஊழலில் அமைச்சர்களும், கொரோனா டெண்டர்களின் மூலம் அ.தி.மு.க.,வினரும் வருமானத்தை உயர்த்திக் கொண்டதை, ஏதோ தமிழக மக்களின் தனிநபர் வருவாய் உயர்ந்துவிட்டது போல் ‘நா கூசாமல்’ பொய் சொல்லியிருக்கிறார் முதலமைச்சர்.

பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக்கூட்டங்களால் நோய்த் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது” என்று, அடுத்த ‘இமாலயப் பொய்யை’, 4 லட்சத்து 22 ஆயிரத்து 85 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாளில், சொல்வதற்கு உண்மையிலேயே முதலமைச்சருக்கு அசாத்தியத் (!) துணிச்சல் இருக்க வேண்டும்.

அதுவும் சென்னையில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 436 பேர் பாதிக்கப்பட்ட நேரத்தில் “நோய்ப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது” என்ற பச்சைப் பொய்யைக் கூறியிருக்கிறார். ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில், தலா 6352 மற்றும் 6495 பேர் என கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி – தமிழகம் முழுவதும் 7231 பேர் இறந்துள்ள நேரத்தில் இந்தப் பொய்யை, சிறிதும் இரக்கமின்றிக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

ஆய்வுகளால் குறைந்து விட்டது என்று முதலமைச்சர் கூறியதற்கு ஒரு சில உதாரணங்களைச் சொல்ல வேண்டும் என்றால்; ஆகஸ்ட் 6-ம் தேதி மதுரையில் ஆய்வு செய்தார்; அன்றைக்கு 11689 பேர் பாதிக்கப்பட்ட நிலை உயர்ந்து, நேற்றைக்கு 14030 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்; நாமக்கல்லில் ஆகஸ்ட் 21ம் தேதி ஆய்வு செய்தார்; அன்றைக்கு 1476 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலை அதிகரித்து நேற்றைக்கு 2051 பேராகியிருக்கிறது. ஆகஸ்ட் 28-ம் தேதி தஞ்சாவூரில் ஆய்வு செய்தார்; அன்றைக்கு 6238 பேர் பாதிக்கப்பட்ட நிலை உயர்வடைந்து, நேற்றைக்கு 6494 ஆகிவிட்டது. இப்படி முதலமைச்சர் ஆய்வுக்குச் சென்ற மாவட்டங்களில் எல்லாம் கொரோனா நோயும், இறப்பும் அதிகரித்துள்ளதே தவிர, குறையவில்லை என்பது கண்கூடான உண்மை.

அரசு அறிவிக்கும் கணக்குகள் படியே இந்த லட்சணம் என்றால், மறைக்கப்பட்டுள்ள கணக்கும் வெளியில் வந்தால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் இறந்தோர் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்திற்கே வந்தாலும் வியப்பில்லை. அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், வெளிப்படையாக எண்ணிக்கையை அறிவியுங்கள் என்று விடுத்த கோரிக்கையை, இதுவரை முதலமைச்சர் கேட்கவுமில்லை; அதைச் செயல்படுத்தி, கொரோனா நோய்த் தொற்றில் அவசியமான வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கவும் தயாராகவில்லை.

அவரிடமே கணக்கு முறையாக இல்லை என்பதை அவரது 30.8.2020 அன்றைய அறிக்கையின் இறுதி பத்திகள் மிக அழகாக எடுத்துரைத்து விட்டது. அறிக்கையின் இரண்டாவது பத்தியில், “பொருளாதார பாதிப்பிலிருந்து தமிழ்நாடு விரைந்து மீண்டு வருகிறது” என்கிறார். அதே அறிக்கையில் நான்காவது பத்தியில், “பொருளாதாரத்தை மீட்டெடுக்க 30.9.2020 வரை ஊரடங்கு நீட்டிப்பு” என்கிறார்.

அறிக்கையின் கடைசிப் பத்தியில் உண்மையை – தனது தோல்வியை – கொரோனா பேரிடரைக் கட்டுப்படுத்த முடியாத தனது நிர்வாக இயலாமையை வெளிப்படுத்தும் வகையில், “நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமான அளவில் உள்ள நிலையில்” என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

அதுவும் போதாது என்று அதற்கு அடுத்த வரியில், “மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்” என்று தமிழக மக்களிடம் சரணாகதியாகி, “நான் தோற்று விட்டேன். இனி உங்கள் பாதுகாப்பை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கைவிரித்து நிற்கிறார் முதலமைச்சர் திரு. பழனிசாமி.

கொரோனா நோய்த் தொற்றை எப்படிக் கையாளக்கூடாது என்பதற்கு இந்திய அளவில் மட்டுமல்ல; உலக அளவிலேயே ஒரு அரசுக்கு ‘முதல் பரிசு’ வழங்க வேண்டும் என்றால், அது தமிழகத்தை தற்போது கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசுக்குத்தான்; முதலமைச்சர் திரு. பழனிசாமி அரசுக்குத்தான் கிடைக்கும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!

ஆகவே மக்களை, ‘கொரோனா பேரிடரை’க் காட்டி ஏமாற்றியது போதும்; பொருளாதாரத்தைச் சீரழித்தது போதும்; ஏன், துறை வாரியாக ஊழல் ஊழல் என்று டெண்டர்களில் கொள்ளையடித்தது போதும்; குறைந்தபட்சம், இப்போது செய்யப்பட்டுள்ள தளர்வுகளிலாவது, தனிநபர் வருமானத்தை இழந்து – வேலையை இழந்து – தொழிலை இழந்து தவிக்கும் தமிழக மக்களுக்கு ஆக்கபூர்வமான முறையில் உதவிட, உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தமது அறிக்கையில் ஸ்டாலின் கூறி உள்ளார்.

More articles

Latest article