சென்னை:

பாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வலியுறுத்தப் போவதில்லை என்று திமுக தலைவர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கூறி உள்ளார்.

தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டமன்றம் மானிய கோரிக்கை கூட்டத் தொடர் இன்று  தொடங்கியது. அடுத்த மாதம் இறுதி வரை மொத்தம் 23 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது திமுக கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஜூலை 1ந்தேதி வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது.  முதல் நாளான இன்று, மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிப்பு நடைபெற்றது.

மேலும், சூலூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ், விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறைந்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்றைய அலுவல்கள் ஒத்தி வைக்கப்படுகிறது/ சட்டப்பேரவை மீண்டும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கூடும் என சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இதையடுத்து, சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  “சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வலியுறுத்தப் போவதில்லை” என்று கூறினார்.

அப்போதைய சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டிய சூழல் இருந்தது. எனவே அதற்கான கடிதத்தை கொடுத்தோம். ஆனால், தற்போதைய சூழலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறோம்” என்று கூறினார்.

தண்ணீர் பிரச்சினையை போக்குவதற்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம், ஆனால் இந்த அரசு தொடர்ச்சியாக போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

தமிழக பாடத்தில் உள்ள குழப்பம், இந்தி திணிப்பு, ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று  திமுக கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் அதிமுக  பெரும்பான்மை பெற்றுள்ளதால், சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதில் திமுக தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதால் அதிலிருந்து திமுக பின்வாங்கி உள்ளது.