சென்னை: ஆளுநர் உள்நோக்கத்தோடு அறிக்கை கேட்டிருந்தால் அதை சந்திப்பதற்கு திமுக தயார் என திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்து தலைமைச்செயலாளர் இறையன்புவிடம் விவரம் கேட்டுள்ளதாக வெளியான விவரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இது வழக்கமான நடைமுறைதான், இதுகுறித்து விவாதிக்க தேவையில்லை என்று தலைமைச் செயலாளர் விளக்கம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தமிழகத்தில் விவாதப்பொருளாக மாறி உள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கையை திமுக ஆதரவாளர்களும் திமுக கூட்டணி கட்சிகளும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். அதே போல, பாஜகவினர் ஆளுநரின் செயல்பாட்டை ஆதரித்தும் ஆளுநர் பதவி பொம்மை பதவி அல்ல. ஆளுநர் அவருடைய பணியை செய்து வருகிறார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுகவைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி ஆர்.எஸ்.பாரதி, மாநிலத்தில் கவர்னர் என்று ஒருவர் இருக்கும்போது, அவருடன் திமுக அரசு ஒத்துழைப்புடன்தான் போய்க்கொண்டிருக்கிறது. திமுகவை பொறுத்தவரை கவர்னர் பதவியை ஏற்றுக்கொள்ளாத ஒரு கட்சி. தற்போது திமுக தமிழ் நாட்டில் ஆறாவது முறையாக நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறது. புதிய கவர்னர் யூனியன் பிரதேசத்தில் இருந்து ஒரு முழு அதிகாரம் மிக்க மாநிலத்திற்கு வந்திருக் கிறார். அதனால், யூனியன் பிரதேசத்துக்கும் மாநிலத்திற்கும் நிர்வாகத்தில் வித்தியாசம் இருக்கிறது. அதை முதலில் அவர் தெரிந்துகொள்ள வேண்டும்.
அரசின் நடவடிக்கைகள் குறித்து ஆர்வத்தில்கூட அவர் கேட்டிருக்கலாம். அதில் ஒன்றும் குற்றமில்லை. உள்நோக்கத்தோடு கேட்டிருந்தால் அதை சந்திப்பதற்கு திமுக தயார். ‘நாங்கள் ஒன்றும் புதியதாக ஆட்சிக்கு வந்தவர்கள் இல்லை. 6வது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறோம். பல கவர்னர்களைப் பார்த்திருக் கிறோம். ஆகையினால், அதை எப்படி கையாள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்’. அதை நாங்கள் சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப்போம். அதைப் பற்றி எங்கள் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் .
மாநிலத்தில் கவர்னர் என்று ஒருவர் இருக்கும்போது, அவரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்பது சம்பரதாயமாக இருந்து வருகிறது. ஆனால், இதுவரை கவர்னரிடம் கொடுத்த மனுக்களில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து ஏதாவது அறிவிக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பியவர், இது தொடர்பாக எம்.ஜி.ஆர் 1972ல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து வரலாற்றில் கணக்கெடுத்துப் பாருங்கள். கவர்னரிடம் கொடுத்த மனுவுக்கு ஏதாவது பரிகாரம் ஏற்பட்டிருக்கிறதா என்றால் கிடையாது என்றார். இது ஒரு சம்பிரதாயமான போக்கு.
‘தமிழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரிதான் கவர்னர். அவர் மத்திய அரசின் திட்டங்கள் எல்லாம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்வதை நாம் அரசியலாக பார்க்க வேண்டியதில்லை. அதனால், அவர் இப்படி ஒரு தகவல் கேட்பதை தவறாகவும் அரசியலாகவும் பார்க்க கூடாது. அவர் மத்திய அரசின் திட்டங்கள் எப்படி மக்களுக்கு போய் சேர்ந்திருக்கிறது என்று தெரிந்துகொள்வதில் தவறு ஒன்றும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.