சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகஅரசு  சிறப்பு பேருந்துகளை இயக்குகிகறது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்பதையும் வெளியிட்டுள்ளது.

தீபாவளிக்காக, சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக இந்தியன் ரயில்வே இன்னும் சிறப்பு ரயில்களை அறிவிக்காத நிலையில், தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்து உள்ளது. அதன்படி, நவம்பர்  1, 2, 3ல், 16 ஆயிரத்து 540 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அறிவித்துள்ள சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்த்து கூறிய போக்குவரத்து துறை அதிகாரிகள், தீபாவளிக்காக அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில், நவம்பர் 1ந்தேதி  8,000 பேரும், நவம்பர் 2ந்தேதி  14 ஆயிரம் பேரும், நவம்பர்  3ந்தேதி 13 ஆயிரம் பேரும் பயணிக்க முன்பதிவு செய்துஉள்ளனர். குறிப்பாக சென்னையில் இரந்து  தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில், முன்பகுதி இருக்கைகள், ஜன்னலோர இருக்கைகள் விறுவிறுப்பாக நிரம்பி வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில், எஸ்.இ.டி.சி., பஸ்களில் அனைத்து இருக்கைகளும் நிரம்பும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்காக, சென்னையில் இருந்து இயக்கப்படும் பஸ்களை, கூட்ட நெரிசல் இல்லாமல் இயக்கும் வகையில், சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.  கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ஆறு இடங்களில் சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து, செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து, இ.சி.ஆர்., வழியாக புதுச்சேரி, கடலுார் மற்றும் சிதம்பரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

தாம்பரம் மெப்ஸ் பஸ் நிலையத்தில் இருந்து, திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் இருந்து, திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பஸ்கள், போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலுார், சிதம்பரம்.மேலும், காட்டுமன்னார்கோவில் செல்லும் பஸ்கள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து வேலுார், ஆரணி, ஆற்காடு, திருப்பத்துார், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, துாத்துக்குடி, திருச்செந்துார், நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், விழுப்புரம். மேலும், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலுார், திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்துார் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும்.

இது குறித்து பயணியருக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தும் வகையில், கோயம்பேடு பஸ் நிலையம் உள்ளிட்ட பயணியர் கூடும் பஸ் நிலையங்களில், விளம்பர பதாகைகளை போக்குவரத்து கழகம் வைத்து வருகிறது.