சென்னை: “தமிழகத்தில் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் அவர்கள் தான்”  என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறிய நிலையில், அதை திமுக தலைமை சுட்டிக்காட்டி டிவிட் பதிவிட்டுள்ளது. இதனால், இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி உறுதியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்கள் பிரசாரமாக தமிழகம் வந்த ராகுல்காந்தி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இறுதி நாளான நேற்று கரூரில் தேர்தல் பிரசாரம் செய்த ராகுல், அரவக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழகத்தில், திமுக காங்கிரஸ் கூட்டணியில்,  மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறோம். காங்கிரஸ் – திமுக உறவு வலுவாக உள்ளது. திமுகவுடன் நல்லுறவு தொடர்கிறது என்றவர்,  மறைந்த  கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் என்றார்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை புகுத்த முயற்சிக்கிறார்கள் என்று கூறியவர்,  அதை தடுக்கவே நான் இங்கு வந்துள்ளேன். பால்கோட் தாக்குதல் பற்றி ஒரு செய்தியாளருக்கு தெரிவித்தது யார்? பிரதமர், பாதுகாப்பு துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருக்கு மட்டுமே தெரிந்தது அர்னாப்புக்கு எப்படி தெரிந்தது? என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் இதுகுறித்து முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏகே அந்தோணியிடம் தான் கேட்டிருந்ததாகவும் அதற்கு அவர் இது போன்ற தாக்குதல்கள் மிகவும் ரகசியம் காக்கப்பட வேண்டியது என்றும் தெரிவித்திருந்தார் என ராகுல் கூறினார்.

இந்த நிலையில், ராகுலின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் அறிவிப்புக்கு திமுக தலைமை வரவேற்பு டிவிட் பதிவிட்டுள்ளது. அதில்,

“தமிழகத்தில் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் திரு. ஸ்டாலின் அவர்கள் தான்” – காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்கள் பேட்டி அளித்துள்ளதாக கூறி, ராகுல் பேசிய செய்தியை இணைத்து டிவிட் பதிவிட்டுள்ளது. 

திமுக தலைமையின் இந்த டிவிட் காரணமாக, தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி உள்ளது.