சென்னை: திமுக ஆட்சிக்கு வந்ததும், பிரமாண்டமாக தொடங்கி வைக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, மத்திய, மாநில அரசுகளின் தனியார் மயத்தை கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனால், ஆட்சி கட்டிலை பிடித்ததும், மற்ற கட்சிகளைப்போல  இவர்களும் தனியார் மயத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே அரசு பேருந்து நிறுத்தங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு அரசு பணிகளும் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், அரசு பேருந்துகளுக்கு ஆள் எடுக்கும் பணியையும் தனியாரிடம் கொடுத்தது. ஆனால், அதை நீதிமன்றம் ரத்து செய்து மாநில அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தது.

இந்த நிலையில், திமுக அரசு பெருமைப்பட்டுக்கொள்ளும், பள்ளி மாணவர்களின் காலை உணவு திட்டத்தை தனியாரிடம் தாரை வார்க்க முன்வந்துள்ளது. இந்த திட்டத்தை கடந்த 2022ம் ஆண்டு, அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, இந்த திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ள்ளதாகவும்,  கல்வி கற்க எந்த காரணமும் தடையாக இருக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக கூறியவர், இதை ஒதுக்கீடு என்பதைவிட முதலீடு என்றே சொல்ல விரும்புகிறேன்.  மாணவர்களின் அறிவை, உள்ளத்தை மேம்படுத்த அரசு முதலீடு செய்துள்ளது. அது நிச்சயம் நாட்டுக்கு லாபம் தரும் வகையிலான ஆற்றலாக, திறமையாக வெளிப்படும் என்றும்,   தமிழகம் முழுவதும்  உள்ள 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 17 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள் என்று பெருமிதத்துடன் கூறினார்.

ஆனால், இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்து ஒரு ஆண்டுதான் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது தனியாரிடம் தாரை வார்க்க திமுக அரசு முன்வந்துள்ளது. முதல்கட்டமாக,  சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 358 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாதாந்திர மாநகராட்சிக் கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.  நவம்பர் 29ந்தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மாணவர்களின் நலன் சார்ந்த இந்தத் திட்டத்தை மாநகராட்சியே நடத்துவதற்கு மாறாக, தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது, திமுகவின் இரட்டை வேடம் என்றும், மக்களை ஏமாற்றுவதே திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம் என சமூக வலைதளங்களில்  சமுக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், திமுக அரசின் தனியார் மயம் முடிவுக்கு பாமக உள்பட சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புதமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 358 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலன் சார்ந்த இந்தத் திட்டத்தை மாநகராட்சியே நடத்துவதற்கு மாறாக, தனியாரிடம் ஒப்படைத்து விட்டு மாநகராட்சி ஒதுங்கிக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநகராட்சியின் முடிவு கண்டிக்கத்தக்கது. மாநகராட்சியின் 358 பள்ளிகளில் பயிலும் 65,000 மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தை மாநகராட்சி மூலமாக செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. அவ்வாறு செயல்படுத்துவதற்கு மாறாக இந்தத் திட்டத்தை தனியாரிடம் வழங்கி அதற்கு ரூ.19 கோடியை தாரைவார்ப்பது நியாயமல்ல. இதனால் பள்ளி மாணவர்களை விட தனியாரே நலம் பெறுவார்கள். தமிழ்நாடு முழுவதும் காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்து, அதற்கான சோதனை முயற்சியாக சென்னையில் இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.

சென்னை மாநகரைப் பொறுத்தவரை கடந்த ஆட்சியிலேயே காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அட்சய பாத்திரம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு மாநகராட்சியோ, அரசோ அந்த நிறுவனத்திற்கு நேரடியாக எந்த நிதியும் வழங்கவில்லை. அதேநேரத்தில் ஆளுனர் மாளிகை மூலமாக ரூ.5 கோடி வழங்கப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதன் காரணமாகத் தான் காலை உணவுத் திட்டத்தை அரசே நடத்தும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், இப்போது அதே திட்டத்தை ரூ.19 கோடியை தனியாருக்கு கொடுத்து செயல்படுத்தச் சொல்வதான் நோக்கம் என்ன?

அதிமுக அரசின் செயலுக்கும், திமுக அரசின் செயலுக்கும் என்ன வித்தியாசம்? இவை அனைத்தையும் கடந்து, தனியாருக்கு வழங்கப்படவுள்ள நிதியைக் கொண்டு இந்தத் திட்டத்தை மாநகராட்சியே நடத்துவதில் என்ன சிக்கல்? தனியாரால் நடத்தப்பட வேண்டிய மது வணிகத்தை தமிழக அரசு விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசே செய்ய வேண்டிய கல்வி சேவையையும் உணவு வினியோகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கின்றன. இதுவா மக்கள்நல அரசுக்கு அடையாளம்?

மாணவர்களின் நலன் சார்ந்த காலை உணவுத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்படக் கூடாது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சியின் தீர்மானம் திரும்பப்பெறப்பட வேண்டும். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாநகராட்சி மூலமாகவே உணவு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் தனியார் மயம் முடிவுக்கு திமுக கூட்டணி கட்சிகளான சிபிஐ, சிபிஎம் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த முதன்மையான திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்துவதற்கு பதிலாக,   தனியாரிடம் வழங்கி அதற்கு ரூ.19 கோடியை தாரைவார்ப்பது நியாயமல்ல. இதனால்  தனியாரே நலம் பெறுவார்கள் என குற்றம் சாட்டி உள்ளனர்.