சென்னை: திமுக அரசின் சாதனைகள் நாடு முழுவதும் எதிரொலிக்க I.N.D.I.A. கூட்டணிக்கு வாக்களிப்பீர் என நாட்டு மக்களுக்கு திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க, ஸ்டாலின்  வீடியோ வெளியிட்டுள்ளார்.

18வது மக்களவைக்காதன  நாடாளுமன்றத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல்  ஏப்ரல் 19-ம் தேதி  தொடங்கி, 7வது கட்ட தேர்தல்  ஜூன் 1 வரை நடக்க உள்ளது. பின்னர், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடக்க உள்ளது.  இந்த நிலையில்,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நாளை மறுநாள் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிஇடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில், இறுதிகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் முதன்மையானவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

“வரும் ஏப்ரல் 19ம் தேதி நம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் நாள். நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது. உங்க வாக்கு உங்க தொகுதியை மட்டும் தேர்வு செய்வதற்கான வாக்கு மட்டுமல்ல. 10 ஆண்டுகளாக நம் நாட்டை நாசப்படுத்திய ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிற தேர்தல்.

இனி இந்தியாவில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா ? வேண்டாமா ? என்று முடிவு செய்கிற தேர்தல் இது. அரசியல் சட்டத்தை காப்பாற்ற நடக்கிற தேர்தல். மதம், சாதி கடந்து மக்கள் ஒற்றுமையாக வாழ, உங்கள் வாக்கு தான் வலிமையான ஆயுதம். நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு என்னென்ன திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறேன் என்று உங்களுக்கே தெரியும்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பேருந்தில் மகளிர் இலவச பயணம், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உற்ற துணையாக திராவிட மாடல் அரசு இருந்து வருகிறது. இந்த சாதனைகள் அனைத்தும் இந்தியா முழுக்க எதிரொலிக்க I.N.D.I.A. கூட்டணி வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர்களையும் தொகுதிவாரியாக குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.