ஒரு கொலை நடந்தால் போலீசார் முதலில் தேடுவது ஆயுதத்தையோ, குற்றவாளியையோ அல்ல… “ஏன் இந்தக் கொலை நடந்தது?” என்ற கேள்விக்கான பதிலைத்தான்.

பெங்களூருவின் கே.ஆர்.புரம் பகுதியில் ஜூன் 22-ம் தேதி நடந்த மூன்று பேர் கொலை வழக்கிலும் அதே கேள்விதான் போலீசாரை துரத்தியது. ஆனால் இந்த வழக்கில் முடிச்சை அவிழ்த்தபோது கிடைத்த பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காரணம், குற்றவாளியின் நெருங்கிய ஆலோசகர் ஒரு மனிதர் அல்ல… ஏஐ சாட்பாட்!

25 வயதான கென்னத், தனது லிவ்-இன் துணை ஷ்வேதாவின் குடும்பத்தினரை கொலை செய்யும் திட்டத்தை ஒரே நாளில் போடவில்லை என போலீசார் கூறுகின்றனர். சுமார் ஆறு மாதங்களாக அந்தத் திட்டத்தை மனதில் வளர்த்துள்ளார்.

விசாரணையில் வெளிவந்த தகவலின்படி, ஷ்வேதா தனது பெற்றோரிடம் இருந்து சுமார் ரூ.50 லட்சம் வாங்கி கென்னத்தின் கிளவுட் கிச்சன் தொழிலுக்காக கொடுத்திருந்தார். ஆனால் தொழில் முன்னேறவில்லை. பணமும் தீர்ந்தது. கடனை திருப்பித் தருமாறு ஷ்வேதாவின் பெற்றோர் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

அந்த அழுத்தம்தான் கென்னத்தின் மனதில் ஆபத்தான எண்ணத்தை விதைத்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் நேரடியாக “எப்படி கொலை செய்வது?” என்று அவர் இணையத்தில் தேடவில்லை. அதற்குப் பதிலாக, “திருடர்கள் வீட்டுக்குள் வந்தால் என்ன செய்யலாம்?”, “யாரையாவது தாக்க வேண்டிய சூழல் வந்தால் எப்படி சமாளிப்பது?” போன்ற கற்பனைச் சூழ்நிலைகளை முன்வைத்து ஏஐ சாட்பாட் ஜெமினியிடம் கேள்விகள் கேட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்வது, ரத்தக்கறைகளை அகற்றுவது, உடல்களை மறைப்பது, எரிப்பது சாத்தியமா போன்ற பல விஷயங்களை மறைமுகமாக ஆராய்ந்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர்.

ஒரு கட்டத்தில், தனது தொழிலுக்காக வாங்கியிருந்த இரும்பு உலையில் உடல்களை எரித்து அழிக்கலாம் என்ற திட்டத்தையும் அவர் பரிசீலித்துள்ளார். ஆனால் அதற்கான நடைமுறை சிக்கல்களை ஆய்வு செய்த பிறகு அந்தத் திட்டத்தை கைவிட்டதாக கூறப்படுகிறது.

இறுதியாக ஜூன் 22-ம் தேதி, ஷ்வேதாவின் தாய் முத்துலட்சுமியை முதலில் வீட்டுக்கு வரவழைத்து தாக்கியதாகவும், பின்னர் தனித்தனியாக வந்த தந்தை சோமசுந்தரம் மற்றும் தங்கை சுப்ரியாவையும் கொலை செய்ததாகவும் போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.

கொடூரமாக குத்தப்பட்ட நிலையிலும் சோமசுந்தரம் படிக்கட்டுப் பகுதி வரை வந்து விழுந்துள்ளார். அவரைக் கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் அளித்த மரண வாக்குமூலம் விசாரணையில் முக்கிய திருப்பமாக அமைந்தது.

கொலைக்குப் பிறகு, வீட்டில் இருந்த பணம் மற்றும் வெள்ளி பொருட்களையும் எடுத்துக் கொண்டு கென்னத் மற்றும் ஷ்வேதா புதுச்சேரிக்குத் தப்பிச் சென்றதாக போலீசார் கூறுகின்றனர். இரண்டு நாட்களில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அதன்பிறகுதான் போலீசார் டிஜிட்டல் தடயங்களை ஆராயத் தொடங்கினர். கென்னத்தின் மொபைல் மற்றும் ஆன்லைன் செயல்பாடுகளை சோதித்தபோது, பல மாதங்களாக ஜெமினி ஏஐ சாட்பாட் மூலம் தகவல்கள் தேடியிருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கென்னத்தின் ஜெமினி உரையாடல் பதிவுகளை வழங்குமாறு கூகுளிடம் பெங்களூரு போலீசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

விசாரணை அதிகாரிகள் கூறுவதாவது, “குற்றத்தில் ஏஐக்கு சட்டரீதியான பொறுப்பு இல்லை. ஆனால் இந்தக் கொலைத் திட்டத்தை வடிவமைப்பதில் அது எவ்வளவு அளவுக்கு பயன்படுத்தப்பட்டது என்பதை அறிய வேண்டியது அவசியம்” என்பதே.

ஒரு குடும்பத் தகராறு… ஒரு தோல்வியடைந்த தொழில் கனவு… பெருகிய கடன் சுமை… அதிலிருந்து பிறந்த கொலைத் திட்டம்… அந்தத் திட்டத்துக்கு துணையாக இருந்ததாகக் கூறப்படும் ஏஐ சாட்பாட்…

இந்த வழக்கு, கொலையாளிகளை மட்டுமல்ல, டிஜிட்டல் உலகின் புதிய சவால்களையும் போலீசார் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. “குற்றவாளியின் ரகசிய நண்பன் யார்?” என்ற கேள்விக்கான பதில், இந்த முறை ஒரு மனிதர் இல்லை… ஒரு ஏஐ சாட்பாட் என்பதுதான் இந்த வழக்கின் மிகப் பெரிய திரில்லர் திருப்பம்.